கொஞ்ச நேரம் வெறுங்காலில் நடக்கும் போது சின்ன முள் குத்தினால் கூட துடித்துப் போய்விடுகிறோம். பல மைல் தூரம் யாத்திரையாக நடந்து கோவிலுக்குச் செல்பவர்கள் காலெல்லாம் என்ன பூப்போட்டு வைத்த பாதையிலா நடந்து வருகின்றன?
ஒவ்வொரு முறை கல் குத்தும் போதும் வலி உயிர் போகும். ஆனால் அறிவில்லாத கடவுள் ஏன் தான் இந்தக் கல்லையும் முள்ளையும் படைத்தானோ என்று திட்டிக் கொண்டிருப்பதில்லை. திட்ட வேண்டிய கடவுளையே source ஆக எடுத்துக்கொண்டு அவனருள் இருந்தால் கல்லையும் முள்ளையும் கடந்து போய் விடலாம் என நினைப்பதற்கு பெயர் தான் பக்குவம். .
வாழ்க்கை என்றால் அதில் சுகங்களும் இருக்கும். சோகங்களும் வந்து போகத்தான் செய்யும். "எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது" என நினைத்துக் கொள்கிறோம் எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பது புரியும் வரை.
இந்தப் பாடலின் அழகே கடவுளுக்கு அவ்வளவு விவரம் பத்தாது நீதான் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை தான்.
ஒரு வீட்டில் கல்யாணக் களை.
மற்றொரு வீட்டில் துக்க நிகழ்ச்சி.
பூ மாலை சூடும் மணமக்கள் ஒருபுறம்.
கணவனை இழந்த பெண்களின் கண்ணீர் ஒருபுறம்.
உலகத்தை இப்படிப் படைத்தவன் பண்பே இல்லாதவனாக இருப்பானோ?
உலகம்
கொடுமையானது தான் என்பதை உணர்ந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கை என்றும் இனிமையானதாக மாறிவிடுகிறது.
பாடல்:
ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.
(புறநானூறு
194)
பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
உயிருக்கு
உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.
சொல்லும் பொருளும்:
நெய்தல் - இரங்கற் பறை
கறங்கல் - ஒலித்தல்
ஈர் - இனிமை
தண் - அருள்
பைதல் -
துன்பம்
உண்கண் - மை
தீட்டிய கண்
வார்ப்பு-
ஊற்றுதல்
உறைத்தல் -
சொரிதல், உதிர்த்தல்
மன்ற - அசைச்
சொல்
அம்ம - அசைச்
சொல்
உரை:
ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். ஆகவே, இந்த உலகத்தின் கொடிய தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்வார்கள்.
Comments
Post a Comment
Your feedback