உதவி
கேட்டு வந்த போது உதவி கிடைக்காத ஏமாற்றம். குடும்பத்தின் வறுமைச் சூழல். எல்லாம்
சேர்ந்த ஒரு வலி இந்தப் பாட்டில்.
பாடல் கூறும் செய்தி இதுதான்:
முடியும்போது
கொடுப்பதும் முடியாதபோது மறுப்பதும் எல்லோருக்கும் இயல்புதான்.
ஆனால்
இல்லாதபோது தருவதாகச் சொல்வதும்
இருக்கும்போது
தராமல் இருப்பதும் நல்லதல்ல.
அப்படிச்
சொல்வது கேட்பவர்களுக்கு வருத்தத்தையும் கொடுப்பவர்களுக்கு கெட்ட பெயரையும்
ஏற்படுத்தும்.
அதைத்தான்
நீ செய்தாய்.
இதுவரை
இப்படி எல்லாம் நீ நடந்து கொண்டது இல்லை.
நோய்
நொடி இல்லாமல் உன் குழந்தைகள் நீடு வாழ்க.
நான்
புறப்படுகிறேன்.
நாணம் தவிர வேறு எதுவும் இல்லாத என் மனைவியை நினைத்துக் கொண்டே...
நான்
திரும்பிச் செல்கிறேன்.
வெயிலையும் பனியையும் பாராமல்...
கூடவே இருக்கின்ற என் வறுமையோடு…
பாடல்:
ஒல்லுவது
ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே.
(புறநானூறு
196)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை.
ஒருவருடைய
புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை.
பரிசில் கடா நிலை
என்பது பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.
சொல்லும் பொருளும்:
ஒல்லுதல் -
இயலுதல்
மருங்கு –
பக்கம்
கேண்மை - இயல்பு
வாயில் – வழி
முனிதல் – வெறுத்தல்
மடி – சோம்பல்
குயிறல் –
செய்தல்
நல்கூர்தல் –வறுமைப்படுதல்
உரை:
தம்மால்
கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க
மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடைய எல்லோருக்கும்
இயல்புதான்.
தம்மால்
கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை
கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும் இரவலரை வருத்துவதோடு மட்டுமல்லாமல்
புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட
விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை.
உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான் வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!
Comments
Post a Comment
Your feedback