யாருக்கெல்லாம் வயதாகும்?
எல்லோருக்கும் வயதாகும்.
வயதானால் தலைமுடியெல்லாம் மீன் முள் போல வெள்ளையாகிப் போகும். கன்னமெல்லாம்
சுருங்கிப் போகும்.
எமனைப் பற்றிய பயம் வரும்.
அப்போது தான் இது நாள் வரைக்கும் யாருக்கெல்லாம் என்ன நல்லது செய்து இருக்கிறோம் என யோசிப்போம்.
யாருக்காவது அப்படி நல்லது செய்திருக்கிறோமா என்று கூட யோசிக்க வேண்டி வரும்.
ஆகவே இப்போது இருந்தே நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள்.
நல்லது செய்ய முடியவில்லை என்றால் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
அது இப்பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் கூட நல்லது தான்.
இப்படிச் சொல்கிறது இந்தப் பாடல்.
பாடல் :
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!
(புறநானூறு195)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத்
தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
உயிருக்கு உறுதியளிக்கும்
இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.
சொல்லும் பொருளும்:
கயல் - கயல்
மீன்
திரை – சுருக்கம்
கவுள் – கன்னம்
கணிச்சி – மழு
திறல் – வலிமை
இரங்குவிர் – வருந்துவீர்
மாதோ - அசைச் சொல்(பொருள் இல்லாதது)
ஓம்பல் – தவிர்த்தல்
உவப்பது –விரும்புவது
படூஉம் - செலுத்தும்
ஆறு - வழி
உரை:
பல குணங்கள் அமையப் பெற்றவர்களே!
கயல் மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம்
விழுந்த கன்னங்களோடு பயனற்ற முதுமையும் கொண்ட பெரியவர்களே!
கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய எமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள். நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.
Comments
Post a Comment
Your feedback