எவ்வளவு தான் காசு பணம் இருந்தாலும் படிச்சிருந்தாத்தானே இந்தக் காலத்தில் மரியாதை என்று பேசுகிறோம். படிக்க வேண்டியதின் அவசியத்தை நாம் எப்போது புரிந்து கொண்டோமோ தெரியவில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'படிச்சாத்தான் மதிப்பு' என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். மற்றவர்களையும் படிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு புறநானூற்றுப் பாடல்.
பாடல் சொல்லும் செய்தி இது தான்.
தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும் கற்க வேண்டும். (சொல்லித் தருவதால் கிடைக்கும் பொருள் தவிர வேறு வருமானம் ஆசிரியருக்கு இருக்காது)
ஆசிரியரிடம் பணிவோடும் பாடத்தில் வெறுப்பின்றியும் படிக்க வேண்டும்.
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ( படிக்காமல் விட்ட பிள்ளை எப்படிப் பிழைப்பானோ என்ற கவலை)
ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் மூத்தவன் என்று அரசன் பார்க்கமாட்டான். அறிவுடையவனையே தேடிச் செல்வான்.
(வெறும் Seniority அல்ல. படிப்பும் திறமையும் தான் முக்கியம்)
வேறுபட்ட நான்கு குலத்தினருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் கல்வி கற்கச்செல்வான்.
ஆகவே படித்தால் போதும். எந்தக் குலமாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் வந்துவிடும்.
பாடல்:
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.
(புறநானூறு பாடல் 183)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback