எந்தத் தவறு அல்லது குற்றம் செய்தாலும் ஐரோப்பாவில் சட்டப்படியான விசாரணை முறை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைக்கு வந்துவிட்டது.
தவறு செய்யும் மனிதர்கள் பொது இடத்தில் கட்டிவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் தவறு செய்ததாகக் கருதப்பட்ட விலங்குகள், பறவைகளையும் கூட பிடித்து கட்டிவைத்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி, பறவைகள் ஆனாலும் சரி என்ன குற்றத்திற்காக அவர்கள் இங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது விளக்கப்பட்டு விசாரித்து தண்டனை வழங்கப்பட்டது.
மனிதர்களைக் கடித்து வெறிநாய்க்கடி நோய் வரவழைத்த குற்றத்துக்காக பல நாய்கள் இவ்வாறு பிடித்து நிறுத்தப்பட்டு அவைகள் செய்த குற்றம் என்ன என்பது (நாய்களுக்குத் தான்) விளக்கிக் கூறப்பட்டது. விசாரிக்கப்பட்டு மற்றவர்களைக் கடித்தது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டு அந்த நாய்கள் அந்த விசாரணை செய்யப்பட்ட இடத்திலேயே தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டன. அதை hang dogs என்று சொல்லி வந்தனர்.
இதைவிட கொடுமையான ஒரு காமெடியும் அரங்கேறியது. 1487 ஆம் ஆண்டில் பிரான்சில் திராட்சைத் தோட்டத்தை வண்டுகள் வந்து நாசம் செய்துவிட்டன என்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வண்டுகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் முறையாக விசாரணை செய்யப்பட்டு வண்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்புக் கூறப்பட்டது.
அந்த வண்டுகளை எப்படி தூக்கில் போட்டனர் என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் எப்படியோ வண்டுகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
மனிதர்கள் இப்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பொது இடத்திலேயே விசாரணை நடைபெறும் என்பதால் அவமானத்தால் குறுகிப் போனார்கள். ஒருபுறம் அவமானம், ஒருபுறம் விசாரணை முடிந்தவுடன் தூக்கில் போடப்படுவோம் என்பது குறித்த பயம் என ஒரு வித்தியாசமான மனநிலையில் இருந்தனர்.
அந்த மனநிலையை hang dog expression என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்போது அந்தக் கடுமையான தண்டனை முறை இல்லை. ஆனால் செய்த தவறுக்கு அனுபவிக்கும் குற்றவுணர்ச்சியை hang dog expression என்று இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.
நம் ஊரில் அப்படி எந்தக் குற்ற உணர்ச்சியும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஓட்டுப் போடக் காசு வாங்குவது கூட உரிமை என்று நினைக்கின்ற சமூகத்தில் திருடர்களுக்கு மட்டும் குற்ற உணர்ச்சி எங்கிருந்து வரும். திருடுவதும் கூடிய விரைவில் கடமையாகிப் போனாலும் போய்விடும் . இல்லையா?
Comments
Post a Comment
Your feedback