பணம் காசல்ல, அன்பு தான் நிலைக்கும் என்ற செய்தியை ஆழமாக சொல்கிறது இந்தப் பாடல்.
பாடல் கூறும் செய்தி இதுதான்:
காற்று வேகத்தில் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்கள், கடல் போன்ற படைகள், மலைபோல் யானைகள் என போரில் வெற்றி பெறுகின்ற மாமன்னர்களைப் பார்த்து வியப்படைய ஒன்றும் இல்லை.
சிறிய ஊரை ஆளுகின்ற மன்னர் என்றாலும் எங்கள் மேல் அன்பு பாராட்டுபவர்களை நினைத்துத் தான் வியக்கிறோம்.
பெருஞ்செல்வம் இருக்கிறது என்பதற்காக எத்தனை துன்பத்திலும் அன்பில்லாதவர்களிடம் செல்லக்கூடாது.
வறுமையில் வாடினாலும் அறிவுள்ளவர்களையே வாழ்த்தி மகிழ்வோம்.
பாடல்:
வளிநடந் தன்ன வாஅய்ச் செலல்
இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே.
(புறநானூறு
197)
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன்
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
திணை: பாடாண் திணை.
ஒருவருடைய புகழ்,
வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை.
பரிசில் கடா நிலை
பரிசில் வேண்டும் தனது விருப்பத்தை புரவலரிடம்
வெளிப்படுத்துவது.
சொல்லும் பொருளும்:
வளி - காற்று
வாவுதல் - தாவுதல்
இவுளி -குதிரை
நுடங்குதல் -
ஆடல்
எனா - இடைச்சொல்
உரும் - இடி
உட்கு - அச்சம்
செரு - போர்
படப்பை - தோட்டம்
மறி - ஆட்டுக்குட்டி
அடகு - கீரை
முஞ்ஞை - முன்னை
சொன்றி -சோறு
எவ்வம் - துன்பம்
நல்குரவு - வறுமை
நனி - மிகவும்
உரை:
காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம் தரும் முரசோடு போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ
ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை.
முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம்.
மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
வறுமையில் வாடினாலும் அறிவுள்ளவர்களையேவாழ்த்தி மகிழ்வோம்.
Comments
Post a Comment
Your feedback