போதும் போதும் என்கின்ற அளவுக்கு செல்வம் குவிந்திருக்கிறது. உறவு, நட்பு என அவர்களோடு அடிக்கடி விருந்துண்டு மகிழ்கிறோம். என்னதான் அப்படி மகிழ்ச்சியாக இருந்தாலும் குழந்தைகள் இருக்கும் வாழ்க்கை தான் உண்மையான மகிழ்ச்சி.
இப்படிச் சொல்வது ஒரு புறநானூற்றுப் பாடல்.
பாடல் சொல்லும் செய்தி:
பலவகையான செல்வங்களைக் கொண்டிருக்கலாம். அச் செல்வத்தைக் கொண்டு பலரோடு உண்ணும் வாழ்க்கையையும் பெற்றிருக்கலாம். எவ்வளவு
பெரிய செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.
பாடல்:
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.
(புறநானூறு 188)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி .
உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback