விபீடணன் என்ன தான் போராடிப் பார்த்தும் சீதை மேல்
கொண்ட மயக்கத்திலிருந்து இராவணன் விடுபடவில்லை.
இப்போது எல்லாம் முடிந்து போய்விட்டது.
இராவணன் இறந்து கிடக்கிறான்.
குப்புற விழுந்து கிடக்கிறான். அது அவன் நிலத்தைக்
கட்டிப் பிடித்து கொண்டு கிடப்பது போல இருக்கிறது.
விபீடணன் கதறி அழுகிறான். அந்தக் கதறலில் கம்பன்
காட்டும் அழகு இது.
நீ பெற்ற வெற்றிகளால் போர்மகளைத் தழுவினாய்.
கற்ற கல்வியால் கலைமகளைத் தழுவினாய்.
பெற்ற பெருமைகளால் புகழ்மகளைத் தழுவினாய்.
இப்படி மற்றோர் பொறாமைப் படத் திகழ்ந்த நீ, சீர்மகளாய், சிறந்த கற்பின் பேர்மகளாய்த் திகழும் சீதையைத் தழுவ ஏனடா நினைத்தாய்?
எல்லாத் திசைகளின் யானைகளையெல்லாம் வென்ற பெருமைபெற்றுவிட்டு
பெண்பித்தில் உயிரைத் துறந்து இன்று பார்மகளைத் (நிலமகளை) தழுவிக்கொண்டு கிடக்கிறாயே!
போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய
கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும்
தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான்
உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத்
தழுவினையோ, திசை யானைப்
பணை இறுத்த பணைத்த மார்பால்?'
Comments
Post a Comment
Your feedback