கன்றை இழுத்துக்கொண்டு வயல் பக்கம் செல்கிறாள் ஒரு பெண். அவளை வழிமறிக்கிறான் ஒருவன்.
நான்பாட்டுக்குத் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திடீரென்று என்னை வழிமறிக்கிறாய். என்னுடைய கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறாய். வழியை விடு.
அதெல்லாம் முடியாது. நான் வழி விடமாட்டேன். உன்னுடைய எருமைக்கன்றை யாராவது வழிமறித்தால் அது என்ன செய்யும்? முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா? அதுபோல, வேண்டுமென்றால் நீயும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போ.
ஒழுங்காக வழியை விடு. தன்னுடைய கன்றிடம் யாராவது வம்பு செய்தால் அதன் தாய்ப்பசு பாய்ந்து வந்து முட்டும். அதுபோல, நீ இங்கே தொடர்ந்து கலாட்டா செய்தால் என்னுடைய தாய் வந்துவிடுவார், உனக்கு நல்ல பாடம் இருக்கு.
உன் தாய் என்ன? இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன், உன் அன்புமட்டும் இருந்தால் போதும், நான் யாரையும் எதிர்த்து நிற்பேன்.
என்ன சொன்னாலும் புரியாதா? நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் எருமை மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய். உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா? நாளைக்கு நான் பால் கறக்கும் பாத்திரத்தோடு பசுவைத் தேடி வயலுக்குச் செல்வேன், அங்கேயும் வந்து இதேபோல் தொந்தரவு செய்வாயா?
ஏதோ தமிழ்
சினிமாவில் வந்த காட்சி போலத் தோன்றும் இந்த நிகழ்வு கலித்தொகையில் வருகிற ஒரு
பாடல்.
அவனது அடாவடியைப்
பிடிக்காதது போலப் பேசும் அந்தப் பெண் நாளைக்கு எந்த நேரம் எங்கே வருவேன் என
விபரமாகச் சொல்வது வராம இருந்திராதே என்பது போலத்தானே இருக்கிறது.
பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா! நீ
என்னையே முற்றாய்? விடு.
விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்
கடுவய நாகுபோல் நோக்கித் தொடுவாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று.
நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று
ஆங்கு
வன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.
யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று
நின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்.
நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்
கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்
மாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்!
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்
வருவையால் – நாண் இலி நீ!
நூல்: கலித்தொகை (முல்லைக்கலி)
பாடியவர்: நல்லுருத்திரனார்
Comments
Post a Comment
Your feedback