நம் குழந்தைகள் விளையாட கையில் எந்த
பொருட்களைக் கொடுத்திருக்கிறோம்? பிளாஸ்டிக் பொம்மைகள், துப்பாக்கிகள், விதவிதமாய
ஒலி ஒளி எழுப்பும் பொம்மைகள், சீன பொம்மைகள், கொரியன் விளையாட்டு பொருட்கள், Happy
Birthday பாடல் பாடும் பொம்மைகள், டிராகன், கங்காரு பொம்மைகள் என்று நிறைய
விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கிறோம்.
நம் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு நாட்டின் கலாச்சார விளையாட்டுப் பொருட்கள்.
கலை, பாரம்பரியம், கலாச்சாரம், உயிரோட்டம் மிக்க நம் நாட்டு விளையாட்டு பொருட்களைத்
தொலைத்துவிட்டு வெளிநாட்டுக் கலாச்சார விளையாட்டு பொருட்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம். நமது கலாச்சார பொருட்களை நாமே நம் மையால் அழிக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறோம்.
நம் நாட்டு விளையாட்டுப் பொருட்கள், மண் பொம்மை, மரப்பாச்சி, செப்புச் சாமான்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என ஒவ்வொரு மாநிலத்திற்கும், கலாச்சார பொருட்கள் நிறைய உண்டு.
பிள்ளையார், பிளாஸ்டிக் பிள்ளையார் ஆனதுபோல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
நவீனத்திற்கு(பிளாஸ்டிக்) மாறியது. ஆனால், அதன் சிறப்பும், அழகும், அதில் இல்லாமல்
போனது.
நம் நாட்டு விளையாட்டுப் பொருட்களை
குழந்தைகள் விளையாடும்போது, விளையாட்டோடு கதை சொல்லும் பழக்கமும் இருக்கிறது.
சிங்கத்திற்கு ஒரு கதை, யானைக்கு ஒரு கதை, முயலுக்கு ஒரு கதை என்று விளையாட்டோடு
கதை கேட்டு வளர்ந்தனர் குழந்தைகள். அந்த கதையை சொல்லக் கேட்பது ஒரு இசைதான்.
இன்று கதை சொல்வது அரிதாகிவிட்டது.
குழந்தைகளின் சண்டை உடனே மறந்து,
ஒன்றாய் விளையாடுவார்கள். இப்போது நம் பிள்ளைகள் யுத்த விளையாட்டுப் பொருட்களுடன்
சண்டை போட்டு விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஏற்பட்ட சண்டையே அடுத்த
விளையாட்டிற்கு காரணமாகி சண்டை போட்டு சுட்டு விளையாடுகிறார்கள்.
நம் பிள்ளைகளை மண்சார்ந்த
விளையாட்டுக்களை மறக்கடித்து, தொலைக்காட்சி, கணினி முன்னால் கட்டி
வைத்திருக்கிறோம்.
நம் மண்ணின் விளையாட்டுக்கள் எத்தனை!
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என தேவநேயப்பாவாணர்
தரும் பட்டியல் இது. இதில் பல விளையாட்டுக்கள் யாருக்கும் தெரியாமல்
போய்விட்டன.மிச்சம் மீதியும் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும்.
1.கண்ணாம்பொத்தி(கண்ணா மூச்சி)
2. ஓடிப் பிடித்தல்
3. நின்றால் பிடித்தல்
4. வீடுகட்டி விளையாடல்
5. கூட்டான்சோறு ஆக்குதல்
6. கம்ப விளையாட்டு.
7. சூ விளையாட்டு.
8. கபடி
9. கோலி
10. குச்சு விளையாட்டு.
11. கிட்டிப் புள்
12 பேய்ப்பந்து.
13. பிள்ளையார் பந்து.
14. மரக்குரங்கு
15 காயா? பழமா?(தண்ணீரில் விளையாடல்)
16. பம்பரம்
17. கால்தூக்குகிற கணக்குப்பிள்ளை.
18. பூக்குதிரை.
19. பச்சக்குதிரை.
20 கிச்சுக்கிச்சு தாம்பலம்.
21. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்.
22. சாட் பூட் திரி
23. ஒருகுடம் தண்ணீர் ஊத்தி
24. பூப்பறிக்க வருகிறோம்.
25. குலை குலையாய் முந்திரிக்கா.
26. புலியும் ஆடும்(சங்கிலி புங்கிலி கதவைத் திற; நான் மாட்டேன் வேங்கைப்புலி)
27. நொண்டி.
28. கிளித்தட்டு(உப்பு எடுத்தல்).
29. பண்ணாங்குழி(பல்லாங்குழி)
30. பாண்டி(சில்லு விளையாட்டு)
31. கும்மி.
32. ஊஞ்சல்(மரத்தில் கட்டி விளையாடல்)
33.பருப்புச் சட்டி.
34. மோதிரம் வைத்தல்.
35. மண் வண்டி விளையாட்டு.
35. தட்டாம் பிடித்தல்.
37. ஓணா அடித்தல்.
38. தாயம்.
39. பரமபதம்.
40. குழந்தை திருவிழா விளையாட்டு(கிராம தேவதையை களி மண்ணால் செய்து குழந்தைகள்
திருவிழா எடுத்தல்)
41. ஒத்தையா ரெட்டையா.
42 ஆடுபுலி ஆட்டம்.
43. சிலம்பாட்டம்.
45. உரி அடித்தல்.
மண் சார்ந்த
விளையாட்டுக்கள் எத்தனையோ இருக்கின்றன. நம் விளையாட்டுக்களில் காலை, மதியம், மாலை,
இரவு, வயல், வெளி, குளம், ஆறு என்றும் சிறுவர், சிறுமி, இருபாலரும் சேர்ந்து விளையாடும்
விளையாட்டுக்களும் உண்டு. பெரும்பாலான விளையாட்டுக்களுக்கு பாடல் உண்டு.
விளையாட்டை முதலில் துவங்குவது யார்? என்பதற்கே பல விளையாட்டுக்கள் உள்ளன.
தோற்றவருக்கு தண்டனையாக பல விளையாட்டுக்களும் உள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் மண்சார்ந்த
விளையாட்டுக்கள் நிறைய உண்டு. ஆனால், வெளிநாட்டு விளையாட்டும், விளையாட்டு பொம்மைகளும்
விளையாட்டாகவே நம் நாட்டு விளையாட்டையும், விளையாட்டு பொம்மைகளையும்
அழித்துவிட்டன.
நம் பிள்ளைகள் மண்ணைத் தொடாமலே மண்ணின்
மணம், குணம் அறியாமலே வளர்கிறார்கள். வீதியெங்கும், காங்கிரீட் சாலை போட்டு மழலைகள் மண்ணை மிதிக்க
முடியாமலும், மழை மண்ணைத் தொட முடியாமலும் செய்துகொண்டிருக்கிறோம்.
ஓடி விளையாட அக்குழந்தைகளுக்கு ஆவல்தான். எங்கே ஓடி விளையாடுவது? எங்கே இடம் இருக்கிறது? குழந்தைகளை மண்ணில் விளையாட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை
நம் பெற்றோர்களிடத்தில், என்னை ஏன் இந்தப் பள்ளியில் சேர்க்கவில்லை? இந்தக்
கல்லூரியில் என்னை சேர்த்திருந்தால் என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என்று
நாம் கேட்பது போல், நம் பிள்ளைகள் நம் நாட்டு கலாச்சார விளையாட்டுப் பொருட்களை ஏன்
எனக்கு விளையாட வாங்கித் தரவில்லை? எனக்கு ஏன் சிலம்பாட்டம் கற்றுத் தரவில்லை? ஏன்
விளையாட விடவில்லை என்று நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் நாள் வரும்.
விஞ்ஞான வளர்ச்சியில் முன் அணியில்
இருக்கும் நாம், மாறிவரும் காலத்திற்கே பாடல் பாடவைக்க முடியாதா?
மரப்பாச்சி பொம்மை - என்னமா தோழி பொம்மையை காணும் பாடல்
பாடச் செய்ய முடியாதா?
மரயானை - பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடாதா?
ஆமை - நான் வீட்டுப்படி ஏறி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பாட முடியாதா?
தலையாட்டி பொம்மை - தலையாட்டி தலையாட்டி வாழாதே பாடல்
பாடவைக்க நம்மால் முடியாதா?
இந்தியநாட்டு கலாச்சார பொம்மைகள்
எப்போது தாய்மொழியில் பேசும்?
நம் தாய் மொழியில் பேசும் பொம்மைகளை நம் நாட்டிலும், வெளி நாட்டிலும் எப்போது நாம்
விற்பனை செய்யப்போகிறோம்?
Comments
Post a Comment
Your feedback