சகல அதிகாரத்தோடு நாட்டையே ஆண்டு வருகிறவரானாலும்
அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல்
அலைந்து பிழைப்போரானாலும் ...
சாப்பிடத் தேவை கையளவு சோறு
தான்.
உடுப்பதற்குத் தேவை இரண்டு உடை
தான்.
மற்ற தேவைகளும் அப்படித்தான் ...
அதனால்,
நானே அனுபவிப்பேன், நானே வகைவகையாகத் தின்று
தீர்ப்பேன் என்று நினைக்காமல் மற்றவர்களையும் பார்.
அவர்களுக்கும் கொடு.
அதற்குத் தானே செல்வம்.
இப்படிச் சொல்வது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த ஒரு
புலவர்.
பாடல் சொல்லும் செய்தி:
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலன்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும்,
இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகத்தைக்கொண்ட விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத வறியவனுக்கும் உண்ணத் தேவை நாழியளவு தானியமே!
உடுக்கத் தேவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.
ஆதலால் செல்வத்துப் பயனே ஈதலாகும்!
செல்வத்தின் பயனை தாமே நுகர்வோம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் பெறமுடியாது.
ஈதலால் மட்டுமே இதனைப் பெறமுடியும்.
பாடல்:
தெண்கடல் வளாகம் பொதுமை
இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'
(புறநானூறு - 189)
பாடியவர் - மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி .
உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Good evening sir. Your sustained interest is always laudable. Keep going high as usual.
ReplyDeleteThank you sir
Delete