ஒரு வண்டிக்கு சக்கரமும் அடி மரமும் முக்கியமானவை.
அந்த வண்டி பயன்பட வேண்டும் என்றால் இந்த இரண்டையும் விட இன்னொன்று மிக முக்கியம். அது வண்டியை ஒட்டுபவன்.
அவனுக்கு நன்றாக ஓட்டத் தெரியும் என்றால் வண்டி நன்றாக ஓடும். இல்லாவிட்டால் வண்டி பாதையில் தான் ஓடும் என்று சொல்ல முடியாது அது சேற்றிலும் ஓடலாம் குழியிலும் விழுகலாம். நாடும் கூட அப்படித்தான்.
இவ்வாறு கூறுகிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.
பாடல் சொல்லும் செய்தி :
சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியை ஓட்டுபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாண்புடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் வந்து சேரும்.
பாடல்:
கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
(புறநானூறு 185)
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாக மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் இளந்திரையம் என்ற நூலை எழுதியதாக உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.
திணை: பொதுவியல்.
எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி .
உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
Comments
Post a Comment
Your feedback