வாகான உடம்பு, வாளிப்பான தேகம் என்று கதைகளில் குறிப்பிடுவார்கள்.
வாட்டசாட்டமாக இருப்பான் என்பதும் உண்டு.
வாகு என்பது நன்கு வகுக்கப்பட்ட திடமான உடம்பு என்று அதன் அமைப்பை வைத்துச் சொல்லப்படுகிறது.
வாளிப்பு வளர்ச்சியை காட்டும் திரட்சியுடைய உடலமைப்பு.
வாகான என்பதை ஆண்களுக்கும் வாளிப்பு என்பதை பெண்களுக்கும் பயன்படுத்துவது பேச்சு மரபு.
வாட்டசாட்டம் மெலிய வேண்டிய இடம் மெலிந்தும் பருக்க வேண்டிய இடம் பருத்தும் காணப்படுவது.
கொள்ளை அழகு என்பது கண்டவர் மனத்தைக் கொள்ளை கொள்ளுவது. கொள்ளை என்றால் மிகுதி என்றும் பொருள் உண்டு.
கட்டழகு என்பது உடம்பின் கட்டமைப்பால் கிடைக்கும் தோற்றப்பொலிவு.
அடிக்கடி மூக்கும் முழியும் என்பார்கள். மூக்கும் விழிகளும் முன்னிற்பவை. முகத்தின் அழகுக்கு முக்கியமானவை. அவை ஏனைய காது உதடு பல்வரிசை போன்ற உறுப்புகளையும் குறிக்கும்.
முக அழகையே அதாவது முகக் களையையே அவ்வாறு குறிப்பிடுவர். களையான முகம் களையான தோற்றம் என்பார்கள்.
"கறுப்பா இருந்தால் என்ன, பார்க்க களையாக இருக்கிறானே" என்று போற்றிக் கூறுவர்.
களை என்பது பார்ப்பவர்களுக்கு களிப்பைத் தரும் தோற்றம். முகத்தில் ஒளி வீசி துறுதுறுப்பாய்த் திகழ்வதையே களை என்பர்.
பெண் திருத்தமாக இருக்கிறாள் என்பது சில வட்டாரத்தில் பெரு வழக்கு. சிலை வடிக்கும் போது சிறிதும் கோணல் மாடல் இல்லாமல் வடிப்பது தான் திருத்தம். கடைசி எல்லை வரை ஒழுங்குற அமைப்பது. உறுப்புகளும் மொத்தத் தோற்றமும் திருத்தமுறச் செய்தமைக்கப்பட்டது போன்றது அது.
கறுப்பு அழகன்று என நினைப்பது தவறு. கறுப்பா இருந்தாலும் சிலை போல சித்திரம் போல திருத்தமாக இருப்பது தான் அழகு. 'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பது தமிழில் ஓர் இலக்கண மேற்கோள்.
'சூடு ஒரு சுவை சிவப்பு ஓர் அழகு' என்பது பழமொழி.
அவன் முருக்காக இருக்கிறான் என்பார்கள். முருகு என்றால் அழகு. முருகாக என்பதே முருக்காக என வலித்தல் விகாரம் பெற்றது.
'நல்ல அழகு' என அழுத்திச் சொல்வார்கள். அதை மென்மையாகத் தானே சொல்லவேண்டும்.
'வெறிப்பான அழகு' நமக்கு எதற்கு?
Comments
Post a Comment
Your feedback