"கழுதை வயசாச்சு? இன்னும் பல்லியைக் கண்டால் பயம்" என நாலு பேருக்கு முன்பாக நம் வீரம் பறைசாற்றப்பட்ட அனுபவம் நமக்கு இருக்கும்.
அதிகமாகக் கோபம் வரும்போது கழுதை வயதையும் பல மடங்காக்கிக் கொள்பவர்களும் உண்டு.
"ஏழு கழுதை வயசாச்சு இது கூடத் தெரியல" என்பதெல்லாம் அந்த ரகம்.
இந்தக் கழுதை வயது வசைகளுக்கு யாரெல்லாம் பொருத்தமானவர்கள்?
கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டு ஊரைக் கூட்டும் அளவு கூச்சல் போடுபவர்கள்...
பாதி குளித்த நிலையில் பல்லியைப் பார்த்துவிட்டு பதறி அடித்து வெளியே ஓடி வருபவர்கள்...
படுக்கையைக் கூட மடித்து வைக்காமல் காப்பி கேட்டு சமையலறைக்குப் போகின்றவர்கள்...
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்பும் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருக்கும் குழந்தைகள்...
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எப்போதும் கை சூப்பிக்கொண்டிருப்பவர்கள்...
வீட்டில் யாரும் இல்லாத போதும் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவாமல் போட்டு வைத்திருக்கும் மன்னார்சாமிகள்...
அருகே இருக்கும் மளிகைக் கடைக்குக் கூடத் தனியாகப் போகத் தெரியாதவர்கள்...
இப்படி இந்தக் கழுதை வயதுப் பட்டத்துக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் நிறையப் பேர்.
சரி கழுதை வயது என்கிறோமே கழுதை என்ன அவ்வளவு வயதா வாழ்ந்து கொண்டிருக்கிறது?
பொதுவாக கழுதைகளின் சராசரி ஆயுள் 25 முதல் 30 வருடம் தான். உலகத்திலேயே மிக அதிக காலம் வாழ்ந்தது ஒரு அமெரிக்கக் கழுதை. அதன் பெயர் சுசி.( நம்ம ஊர்ப் பெயர் போல இருக்கிறது).அதிக நாட்கள் வாழ்ந்த அந்தக் கழுதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கூட இடம் பெற்றிருக்கிறது. ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் வாழ்ந்தது அந்த கழுதை.
இந்தியக் கழுதைகள் எதுவும் அப்படி ஒரு சாதனையைச் செய்ததாகத் தெரியவில்லை. நம் கழுதைகள் 25 ஆண்டுகள் வாழ்ந்தாலே அது பெரிய விஷயம். அப்படியிருக்க எந்தக் கழுதையால் இப்படி எல்லாக் கழுதைகளுக்கும் சேர்த்துக் கெட்டபெயர் என்பதை யாராவது ஆராய்ச்சி செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் இந்த 'கழுதை வயது' என்கின்ற வசை மொழி நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தால் அது தவறு. இது உலகம் முழுவதும் பொதுவாகக் கூறப்படுகின்ற ஒன்று.
ஆங்கிலத்தில் கூட donkey's years என்று சொல்வார்கள். நீண்ட காலம் என்பதைக் குறிப்பதற்கு donkey's years என்று சொல்கிறார்கள்.
கழுதைக்கு காது கொஞ்சம் பெருசு. அதனால் ஆரம்பத்தில் பெரியதாக இருப்பதைச் சொல்ல donkey's ears என்று சொன்னார்கள். பின்னாளில் யாரோ இந்த ears(காதுகள்) என்பதை years ( ஆண்டுகள்) எனத் தவறாகக் கூறி , அது அப்படியே நிலைத்துவிட்டது என்றும் ஒரு விளக்கம் இருக்கிறது.
குதிரை, வரிக்குதிரை வம்சத்தில் பிறந்து இருந்தாலும் கூட கழுதை மட்டும் ஏனோ தாழ்வாகவே கருதப்படுகிறது .
சில நேரங்களில் கழுதைக்கும் குதிரைக்கும் கல்யாணம் நடப்பதுண்டு. கழுதை மணமகனுக்கும் குதிரைப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையை mule (கோவேறு கழுதை) என்று சொல்வார்கள். அதே நேரத்தில் குதிரை மணமகனுக்கும் கழுதைப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையை hinny(இன்னி) என்று சொல்வார்கள். இப்படி கழுதைக் குடும்பத்திற்கும் குதிரைக் குடும்பத்திற்கும் திருமண உறவு முறை இருந்தாலும் அவற்றுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. அதாவது mule, hinny இவற்றுக்கு எப்போதும் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை.
ஒரு கழுதைக்(donkey) குடும்பம் வரிக்குதிரைக்(zebra) குடும்பத்தோடு கொள்ளும் திருமண உறவு முறையும் அப்படித் தான். அவற்றுக்கு பிறக்கும் குழந்தைகளை zonkey ( ஜாங்கி) அல்லது zeedonk ( ஜிடாங்க்) என்று சொல்வார்கள். இந்த zonkey, zeedonk குழந்தைகளுக்கும் எப்போதும் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை.
ஆக கழுதைகள், குதிரைகள், வரிக்குதிரைகள் ஆகியவை ஒரே ரத்தமாக இருந்தாலும் அந்தந்த இனத்துக்குள் மட்டும்தான் குடும்பம் அமையும். கலப்புத் திருமணம் செய்து கொண்ட கழுதைகளின் வம்சம் அந்தத் தலைமுறையோடு அழிந்து விடும்.
கழுதைகள் வனவிலங்கு வகையிலும் மனிதர்களைச் சார்ந்து வாழும் வகையிலும் உள்ள அதிசயப் பிறவிகள். கழுதைகள் செய்துவந்த வேலைகளை இயந்திரங்கள் பிடித்துக் கொண்டதால் கழுதை இனம் அழியும் நிலையில் உள்ளது.
வேலை வாங்க முடியாததால் மனிதர்கள் கழுதைகளை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. பசு மாடுகளே காகிதம் தின்று பழகிக்கொண்ட இந்தக் காலத்தில் கழுதைகள் பாவம் எப்படி உயிர் வாழும்.
கழுதைகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் கழுதை வயதுக்கு மட்டும் அழிவில்லை போல.
Comments
Post a Comment
Your feedback