அன்னம் போல நடை ...
முல்லைக்கொடி போல மெல்ல வளையும் இடுப்பு ...
இப்படிக் காலம் காலமாக ஒப்பிடுகிறார்கள்; பாடி வருகிறார்கள்.
இதற்கு இதுதான் பொருத்தம் என்று ஒருவர் முதலில் எழுத, அடுத்து வந்தவர்களும் அப்படியே எழுத, அது எப்படியோ ஒரு மரபாக மாறிவிட்டது. அப்படி இல்லாமல் சில நேரங்களில் வினோதமான ஒப்பீடு நம் கண்ணில்படும்.
கிதார் ஒரு கிணறு
நீரின் இடத்தில் காற்று
என்பது அப்படிப்பட்ட ஒன்று.
கிதார் ஒரு வாத்தியம். கிணற்றுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
காற்றும் நீரும் இயல்பில் வேறு வேறு. அதை எப்படி ஒப்பிடுவது?
அப்படி இல்லை; இரண்டையும் ஒப்பிடலாம். இரண்டிலும் ஆழமான ஒப்புமைகள் இருக்கின்றன என்று அப்துல் ரகுமான் விளக்குவார்.
இந்தப் பாடல் வரிகள் அவருடையது அல்ல. இது ஜெரார்டோ என்ற ஒரு ஸ்பெயின் கவிஞர் எழுதியது. அதற்கு விளக்கம் மட்டுமே அப்துல் ரகுமான் சொன்னது.
இது தான் அவர் சொன்ன விளக்கம்.
கித்தாரையும் கிணற்றையும் ஒப்புமையாகப் பார்க்கலாம்.
கிதார், கிணறு இரண்டும் மனிதனின் தாகத்தின் காரணமாகத் தோன்றியவை.
உடலில் தாகம் கிணற்றைத் தோண்டியது.
ஆன்மாவின் தாகம் கிதார் வாத்தியத்தைக் கண்டுபிடித்தது.
கிணற்றில் நீர்.
கிதாரில் காற்று.
மண்ணுக்குள் நீர் ஒளிந்திருக்கிறது.
கிதாருக்குள் இனிமேல் இசையாகப் போகின்ற காற்று ஒளிந்திருக்கிறது.
இரண்டையும் மனிதனின் தேடலே கண்டுபிடித்தது.
இரண்டையும் மனிதனின் கை தான் வெளிப்படுத்தியது.
தோண்டத் தோண்ட கிணற்றில் நீர் சுரக்கிறது.
மீட்ட மீட்ட கிதாரில் இசை சுரக்கிறது.
நீர் தாகத்தை அப்போதைக்கு தணிக்கிறது; அது தாகத்தை அழித்து விடுவதில்லை.
இசையும் அப்படித்தான். ஆன்மாவின் தாகத்தை அது அப்போதைக்குத் தணிக்கிறது; அழித்து விடுவதில்லை.
மீண்டும் தாகம் எழுகிறது.
மீண்டும் நீரும் இசையும் தேவைப்படுகின்றன.
உண்மையில் இந்த இரண்டும் வேறு வேறு அல்ல; இரண்டும் ஒரே மூலத்தின் அவதாரங்கள்.
இப்போது இது புரிகிறது. ஆனால் படித்தவுடன் நமக்கு இந்த விளக்கம் தோன்றாத போது "இதில் என்ன இருக்கிறது? " என்று நினைத்து அப்படியே போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறோம்.
"நமக்குப் புரியாததெல்லாம் குப்பை"
என்பது நமக்கு நாமே வைத்துக்கொண்ட மரபு.
"வானம் ஒரு தோட்டம்"
என்பது கூட அதே கவிஞர் எழுதியது தான்.
கிணற்றையும் கிதாரையும் போல வானத்தையும் தோட்டத்தையும் முயற்சித்துப் பார்க்கலாமா?
புரிந்தால் கவிதை.
Comments
Post a Comment
Your feedback