பாலைக் கறந்து விட்டு, கறந்த பாலை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஊற்றி வைத்துவிட்டு, கன்றுக் குட்டியைத் தாம்புக் கயிற்றில் கட்டி வைத்தேன்.
என் அம்மா வாங்கித்தந்த பூப் போட்ட கரை கொண்ட நீல நிறப் புடவையை உடுத்திக்கொண்டேன்.
உடுத்திக்கொண்டு முல்லைப் பூக்கொடிகள் படர்ந்திருக்கும் தோட்டத்திற்குப் போய் ஆடு மேய்க்கும் ஆயர் சிறுமியரோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன்.
அப்போது குருந்தம்பூ மாலை அணிந்துகொண்டு அவன் அங்கு வந்தான்.
"பெண்ணே!
நீ விளையாடுவதற்கு சிறுவீடு கட்டித் தரட்டுமா" என்றான் அவன்.
"பிறர் கட்டித் தந்த இல்லத்தில் விளையாட நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை" என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன்.
"பெண்ணே! உன் கூந்தலில் உள்ள பூ வாடிப் போயிருக்கிறது பாரேன். புத்தம் புதிய பூ வைத்தால் உன் கூந்தல் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா !" என்றான்.
" வேறொருவன் தந்த பூவை வாங்கி முடித்துக்கொள்ள நான் என்ன ஒன்றுமறியாத பேதையா? " என்று மறுத்துவிட்டேன்.
அதோடு விட்டானா அவன்!
"பெண்ணே! உன் தோளில் அழகாக தொய்யில் எழுதிவிடட்டுமா" என்றான்.
" மற்றவர் வந்து என்னை அழகு செய்ய வேண்டும் என்று நான் ஏங்கிக் கிடக்கிறேனா? ஆனாலும் உனக்கு ஆசை தான் " என்று மறுத்துவிட்டேன்.
என் தோழியே!
இப்படித் தான் அவன் சொன்னதற்கெல்லாம் மாறாகப் பேசி நான் மறுத்துவிட்டேன்.
அவன் ஏமாந்து போய்த் திரும்பிச் சென்றுவிட்டான்.
அப்போதிருந்து நான் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எதனால் நான் இப்படி இருக்கிறேன்?
தோழி!
நீ இப்போது எனக்கு ஒன்று செய்ய வேண்டும்!
என்ன தெரியுமா?
"பிறத்தியார் முன் வெட்கத்தில் ஆயர் பெண்கள் அப்படித் தான் பேசுவார்கள்" என்று எப்படியாவது அவனுக்கு நீ சொல்லியனுப்ப வேண்டும்.
அதற்குப் பின், அவனைப் பற்றி என் அம்மா அப்பாவுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
அப்போது தான், என்னுடைய புரியாத இந்த நோய் குணமாகும் போல.
தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன்.
'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்.
(கலித்தொகை – முல்லைக் கலி)
நல்லுருத்திரன்
Comments
Post a Comment
Your feedback