தெனாலிராமன் கதைகளில் இது ஒரு கதை.
விஜய நகரத்திலுள்ள எலித் தொல்லைக்காக ஆயிரக்கணக்கில் பூனைக் குட்டிகள் வயநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையும் அதை வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுக்கப்பட்டது.
தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார்.
தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன தன் பூனையைக் காட்டினான். அதைக் கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.
அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.
பாலைக் கண்டதுமே அந்தப் பூனை ஓட்டமெடுத்தது. வியப்புடன் அதைப் பற்றி விசாரித்தபோது தான் ஒரு உண்மை தெரிந்தது. ஒரு நாள் சுடச்சுடக் காய்ச்சிய பாலை அவசரமாகக் குடித்த பூனை அதன் பின் பாலைக் கண்டதும் சூடுபட்ட பழைய அனுபவத்தால் குடிக்கத் தயங்கியது.
பூனைக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் கூட இந்த நினைவுப் பதிவுகள் இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு செயலிலும் முன்பு செய்த செயலுக்கான வெற்றியோ தோல்வியோ கூடவே வந்து ஒரு தாக்கத்தை மனதிற்குள் உருவாக்குமாம்.
ஆங்கிலத்தில் அதை once bitten twice shy என்று சொல்கிறார்கள்.
ஒரு முறை தெரு நாய்க்கடி வாங்கியிருந்தால் பார்க்கிற நாயெல்லாம் கடிக்க வருவது போலவே இருக்கும்.
"அன்னைக்குக் கூட அப்படித்தான்" என்று நாம் சொல்ல ஆரம்பிக்கும் அல்லது நமக்குச் சொல்ல ஆரம்பிக்கப்படும் அனுபவங்கள் எல்லாம் இந்த ரகமாகத் தான் இருக்கும்.
அப்படி பழைய அனுபவங்களால் வரும் தயக்கம் அப்படியே இருக்க சிலரோ அதே போல மறுபடி மறுபடி அனுபவிப்பார்கள். அவர்களைப் பார்த்து "பட்டாலும் உனக்குப் புத்தி வராதா?" என்று திட்டுவதைப் பார்த்திருப்போம். நாமே கூட அப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கவும் வாய்ப்புண்டு.
அப்படித் திட்டும் போது சொல்லும் 'பட்டாலும்' என்பது 'சூடுபட்டாலும்' என்பதன் சுருக்கம் தானே.
இன்னும் கொஞ்சம் காரமாகத் திட்டுபவர்கள் ''சூடுபட்டாலும்" என்பதற்குப் பதிலாக "சுட்டுப் போட்டாலும்" என்று சொல்வதுண்டு.
சூடுபட்டாலும் light tea என்றால் சுட்டுப் போட்டாலும் கொஞ்சம் strong. அவ்வளவு தான்.
Comments
Post a Comment
Your feedback