அது போர்க்களம். சூர்ப்பனகை சொன்னதால் ராமனைப் பழிவாங்க வேண்டும் என்று வந்தது கரன் என்ற அரக்கர் படை.
அரக்கர்களுக்கும் ராமனுக்கும் இடையே போர் நடக்கிறது. ராமன் விட்ட அம்பால் வில்லை இழந்து விடுகிறான்.
வில் இழந்து விட்டான். அவ்வளவுதான்
என்று கூறுகிறது பாடல்.
அதாவது, வில்லை இழந்து விட்டான். இனி அவன் அவ்வளவு தான் என்று நாம் நினைத்திருக்க...
வில்லை இழந்து விட்டான் அவ்வளவு தானே!
என கம்பன் ஒரு புதிய கோணத்தைச் சொல்வான்.
அது என்ன?
வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம், இடிக்கும்
சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும்
கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல்.
(கம்ப இராமாயணம் - ஆரண்ய காண்டம்)
வில் இழந்து விட்டான். அவ்வளவு தான். ஆனால் அவன் இழக்காதது பல .
வில்லை இழந்த பின்னும் அவன் முகத்தில் நம்பிக்கைப் பிரகாசம் குறையவில்லை.
வில்லை இழந்த பின்னும் சினம் கொப்பளிக்கும் அவன் குரலை இழக்கவில்லை.
வில்லை இழந்த பின்னும் தினவெடுக்கும் அவன் தோள் வலிமையை இழக்கவில்லை.
வில் இல்லாத போதும் அவன் வீசுகின்ற பாறைகள், கற்கள் எண்ணிக்கையில் குறையவில்லை.
வில்லை இழந்த பின்னும், சுற்றிச் சுழன்று போர் புரியும் அவன் வேகம் குறையவில்லை.
எல் இழந்திலன் - எல் என்றால் பொலிவு, ஒளி, பிரகாசம் என்று பொருள்.
வெங்கதம் என்றால் கொடுஞ்சினம்.
ஒன்று போனால் என்ன; இன்னொன்று இல்லாமலா போய்விடும்? என்பது நம்பிக்கை.
ஒன்று போனால் எல்லாம் போய்விட்டது என நினைப்பது பலவீனம்.
போனது ஈடு செய்ய முடியாதது என்ற பிறகும் என்ன மிச்சமிருக்கிறது என்று பார்த்து அதை முழுதாகப் பயன்படுத்துவது என்பது நிதானம் மட்டும் அல்ல வீரமும் கூட.
போரிட்டது அரக்கர்கள்...
அதுவும் போரிட்டது ராமனை அழிக்க... என்ற பின்னும் அரக்கர்களின் மனவலிமை எல்லோர்க்குமான பாடம் என்று காட்டுகிறது கம்பனின் எழுத்து.
இந்த மனவலிமையைத் தான் will power என்கிறார்கள்.
Where there is a will there is a way.
என்பார்கள்.
Though there is no வில் there is a way.
என்பது தான் பாட்டு சொல்லும் one line போல.
Comments
Post a Comment
Your feedback