எலியைப் பார்த்தவுடன் ஒரு நாய்க்கு என்ன தோன்றும்?
எலியைப் பார்த்தவுடனே நாய்க்குள் ஒரு சிலிர்ப்புத் தோன்றுமாம். அதன் உடம்பில் ஒரு துடிப்பு ஏற்படுமாம்.
எதற்கு இந்த எலி, நாய் எல்லாம்?
இது கவிதையா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்று கேட்டபோது ஒருவர் சொன்னது இது.
யார் அந்த ஒருவர்?
அவர் பெயர் A E.HOUSMAN.
லண்டன் பல்கலைக் கழகத்தில் லத்தீன் பேராசிரியராக இருந்தவர்.
நல்ல கவிதையை எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்...
கவிதை இன்னது என்று என்னால் சித்தரிக்க முடியாது. எலியைக் கண்டவுடன் நாய்க்கு ஒரு சிலிர்ப்பு வருமல்லவா! அப்படி நல்ல கவிதையைப் படிக்கும் போது எனக்கு ஒரு சிலிர்ப்பு வரும்.
நான் சவரம் செய்துகொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு அழகான கவிதை நினைவுக்கு வந்தால் எனக்கு முதுகில் ஒரு நடுக்கம் வரும். உடம்பு சிலிர்த்து விடும்.
I could no more define poetry than a terrier can define a rat.
பொருள், அதற்கான விளக்கம் இதெல்லாம் அறிவு வட்டத்தைச் சேர்ந்தவை.
உணர்ச்சி ஒன்று தான் கவிதைக்கு வேராகும்.
படிக்கும் போதே அந்த உணர்ச்சி வரவேண்டும்.
இவர் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு,
கவிதை இல்லாத கவிதை எது?
உண்மைக் கவிதை எது?
என்று நாம் முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி, மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொரு ஓசையாய் ஐந்தும் ஆய ஆய மாயனே!
(திருமழிசையாழ்வார்- திருச்சந்த விருத்தம் )
இது ஆழமான பொருள் கொண்ட ஒரு அறிவுப் புதையல். ஆனாலும் இதில் உணர்ச்சி வேகம் இல்லை.
ஆகவே இது HOUSMAN பார்வையில் கவிதை அல்ல.
சரி எது கவிதை?
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களை கணமா அரங்கமா நகருளானே.
(தொண்டர் அடிப்பொடியாழ்வார்)
யார் இருக்கிறார்கள் எனக்கு உன்னைத் தவிர?
இந்த உணர்ச்சி அழுத்தமாக இருக்கிறது இந்தப் பாடலில்.
ஆகவே இது கவிதை.
இன்னொரு பாடல்:
உற்றாரை யான் வேண்டேன்,
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா, உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்
கசிந்து உருக வேண்டுவனே!
(திருவாசகம் -மாணிக்கவாசகர்)
இந்தப் பாடலைப் படிக்கும் போதே நம்மால் ஒரு உணர்ச்சி அலையை உணர முடிகிறது.
எந்தெந்த உறவினர்கள் உதவி செய்வார்கள் என்று எனக்குக் கவலையில்லை.
எந்த ஊரில் உதவி கிடைக்கும்? யாரிடம் உதவி கிடைக்கும்? என்றெல்லாம் நான் தேட மாட்டேன்.
அறிவில் சிறந்தவர்களை நாடிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
நான் கற்றுத் தெரிந்து கொள்ள இனியும் படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!
எனக்குத் தெரிந்ததெல்லாம் உன்னுடைய திருவடிகள்மட்டும்தான்.
கன்றின்மீது அன்பு செலுத்தும் தாய்ப்பசுவைப்போல நீ
கதியற்ற நான் வேண்டுவதைக் கேள்.
HOUSMAN நிச்சயம் இதை கவிதை என்று சொல்லுவார்.
HOUSMAN தன்னை நாய் போல உணரும் போது, கவிதை அவருக்கு எலி போலத் தோன்றியது.
நமக்கு அப்போது கவிதை ஒரு எலியைப் போலத் தோன்றுகிறதோ இல்லையோ எதிர்த்த வீட்டுக் குறும்புக்காரச் சிறுவனைப் போல தோன்றாமல் இருந்தால் சரி.
Comments
Post a Comment
Your feedback