இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்.
மென்மையான சாரல் மழை...
எங்கும் குளிர்ச்சியாக இருக்கிறது.
எங்கள் ஊரெல்லாம் பச்சைப் பசேலென இருக்கிறது.
கரும்பு முற்றி வளர்ந்து அதன் தோகை அசைந்து ஆடுகிறது.
புதிதாக திருமணம் ஆகி வந்த சில நாட்களில் என்னை விட்டு வேலை காரணமாக அவன் பிரிந்து போக வேண்டி இருந்தது.
அவனும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இதோ இன்று வந்துவிட்டான்.
அவனைக் கண்டதும் ஓடோடி வந்து அவனை கட்டித் தழுவிக் கொள்ளவேண்டும் போல ஆசை.
இத்தனை காலம் பிரிந்திருந்ததை எண்ணி கண்ணீர் பொங்கி வருகிறது.
கண்ணைத் துடைத்துக் கொள்கிறேன்.
அவனோ மெல்லச் சிரிக்கிறான்.
என் கண்ணை நினைத்து எனக்கே வெட்கம் வருகிறது.
அவன் பிரிந்து போகும் போது கண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவனைக் கண்ட பின்பு கண்ணீர் வருகிறது.
"இந்தக் கண்ணுக்கு ஒரு நாணம் இல்லை. அழ வேண்டிய நேரத்தில் அழாமல் இப்போது அழுகிறேதே "
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழி துளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே.
(குறுந்தொகை)
பொருள்
நாணில - நாணம் இல்லை
வெங் கண்ணே - என் கண்ணே
நாணேர்பு - அவர் பிரிந்து சென்ற நாளை ஏற்றுக் கொண்டு
சினைப்பசும்பாம்பின்- கருக் கொண்டபச்சைப் பாம்பின்
சூன் - கரு
முதிர்ப் பன்ன -முதிர்ந்த போது.
கனைத்த -வளர்ந்த
கூம்பு - தோகை
பொதி யவிழ -விரித்து நிற்க
நுண்ணுறை - மெல்லிய
யழி துளி - மழைத்துளி
தலைஇய - பெய்ய
தண்வரல் வாடையும் - குளிர்ந்த வாடை காற்று
பிரிந்திசினோர்க்கு - பிரிந்து வாழும் தலைவருக்கு
அழலே- அழுவதே
இதே உணர்வு கண்ணதாசன் வரிகளில் ...
காதல் சிறகை
காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த
கணவனின் மார்பில்
கண்ணீர்க் கடலில்
குளிக்கவா
எண்ணங்களாலே
பாலம் அமைத்து இரவும்
பகலும் நடக்கவா
இத்தனை
காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
முதல் நாள்
காணும் திருமணப்
பெண்போல் முகத்தை
மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்திடும்போது அழுதால்
கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து
சிலையாய் இருந்தால் பேச
மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி
அதுதான் காதலின் சன்னிதி
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback