Skip to main content

இதெல்லாம் கவிதை என்றால்...?

கவிதைகள் பற்றிய ஒரு  உரையாடலில்   கண்ணதாசன் கலந்து கொண்டார். அவரது பதில்கள் அவர் கவிதைகள் போலவே எளிமையானவை.  யாரைச் சென்று சேர வேண்டுமோ அவர்களை முழுதாக சென்றடையும் தன்மை கொண்டவை. 



யாப்பைக் கொண்டு தான் கவிதையை அளவிட வேண்டுமா?

கண்ணதாசன் பதில்: 

யாப்பில்லாமல் கவிதை கிடையாது. கருத்தும் யாப்பும் சேர்ந்தது தான் கவிதை. கருத்து மட்டும் கவிதையாகாது. அதை வேறு என்னவென்று சொன்னாலும் கவிதை என்று மட்டும் சொல்லமுடியாது. தமிழில் 600 க்கு மேற்பட்ட யாப்பு வகைகள் உண்டு. அதில் எதை வேண்டுமானாலும் கையாளலாம். அவசரத்துக்கு ஆசிரியப்பா. எல்லாவற்றிலும் ஒரு ரிதம் உண்டு. இந்த பிரபஞ்சமே ஒரு ரிதத்துடன் தான் இயங்குகிறது. குடிக்காமல், நிதானத்துடன் ஒருவன் நடந்தால் அவர் தப்படிகளின் இடைவெளி ஒரே சீராகத் தான் இருக்கும். சரியாக மூடப்படாத பைப்பில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுகிறது. ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையிலான duration ஒரு தாளகதியுடன் ஒன்றாகவே இருக்கும்.

யாப்பில்லாமல் சீர், தளை கொண்டு கவிதை செய்யலாமா! எதுகை மோனை அவசியமா?

கண்ணதாசன் பதில்:

படித்த கவிதை ஞாபகத்துக்கு வர வேண்டும்.எதுகையும் மோனையும் அதற்குத் தான்.  நாம் படித்த  ந்த வசன கவிதையையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் கம்பனை  நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

"இற்பிறப்பென்பதொன்றும் இரும்பொறை யென்பதொன்றும்

கற்பெனும் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்டேன்"

இதில் 'இற்பிறப்பு' சொன்னவுடனே நமது நினைவுக்கு கற்பு வந்துவிடுகிறது. இடைச் சொற்களும் தானே நினைவில் வந்து கவிதை மனதில் நிலைத்து விடுகிறது. ஆனால் வசன கவிதையைப் படித்தால் மனதில் முடிவாக ஒன்றும் தங்குவதில்லை.


சங்கப் பாடல்கள் பற்றி தங்கள் கருத்து?

கண்ணதாசன் பதில்:

சங்ககாலத்தில் எளிய முறையில் ஆனால் கடுமையான சொல்லைக் கொண்டு கவிதை செய்திருக்கிறார்கள். ஆசிரியப்பா முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த சங்கப் புலவர்கள் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.


தளை தவறி, ஆனாலும் ஓசை நயத்துடன் வெண்பா எழுதலாமா?

கண்ணதாசன் பதில்:

கூடாது. அதனால் தான் நான் சில வெண்பாக்கள் எழுதிவிட்டு வெண்பாக்கள் எழுதுவதை நிறுத்தி விட்டேன். வெண்பா இலக்கணம் கடினமானது. இதுவரை நள வெண்பா, முத்தொள்ளாயிரம், இன்னும் அகலிகை வெண்பா போன்ற மிகச்சில வெண்பா நூல்களே வந்துள்ளன. தவறான வெண்பாக்களை எழுதி புகழேந்தியைக் கொல்ல வேண்டுமா?


யாப்பில் பழைய மரபை அழிக்காமல் புதிய வகைகளைச் சேர்க்கலாமா?

கண்ணதாசன் பதில்:

சேர்க்கலாம். ஆனால் இலக்கண எல்லையை விரித்துக் கொண்டே போவது வெங்காயத்தை உரிக்கிற காரியம். கொஞ்சம் உரித்ததும் குழம்பில் போடுவது தான் மரியாதை. உரித்துக்கொண்டே போனால் அப்புறம் ஒன்றும் மிஞ்சாது


இலக்கணம், மரபில்லாமல் ஏன் கவிதை எழுதக் கூடாது?

கண்ணதாசன் பதில்:

இப்படி எல்லாம் செய்து கொண்டே போனால் எது கவிதை, எது கவிதை இல்லை என்று கடைசியில் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். பரதநாட்டியம் என்றால் ஒரு தாள கதியுடன் ஆட வேண்டும். இஷ்டத்துக்கு தா,தை என்று குதித்தால் அது பரதநாட்டியம் ஆகுமா? ஒவ்வொரு விஷயத்தையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு நியதி உண்டு.


Modern Poetry யைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

கண்ணதாசன் பதில்:

படித்துவிட்டு தூக்கிப் போடலாம். இவைகளை மனதில் வைத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. படிக்கும் போது இல்லாமல் படித்தபின் இவைகள் ஒரு மன விளைவையும் உண்டாக்காது. காலத்தால் கண்டிப்பாக நிற்காது. ஒரு 50 வருடங்கள் கூட. 

கவிதை உரைநடை இதில் எதை எழுதும்போது தங்கள் இயல்பாக உணர்கிறீர்கள்?

கண்ணதாசன் பதில்:

இரண்டிலும் தான். கவிதை எழுதும்போது கவிதை இயல்பாக வருகிறது. உரைநடை எழுதும் போதும் அப்படியே. அதிகமாகச் சொல்ல விஷயம் இருந்தால் உரைநடையில் சொல்வேன். சின்ன விஷயத்தை அழகாகச் சொல்ல வேண்டும் என்றால் கவிதையில் சொல்வேன்.

எல்லா எண்ணங்களையும் தமிழில் சொல்ல முடியுமா?

கண்ணதாசன் பதில்:

பிறமொழிக் கலப்பைத் தடுக்க முடியாது. 'அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில்' என்று சொல்லாமல் அந்த உணர்ச்சி வெள்ளத்தில் என்றால் என்னவோ நன்றாக இல்லை போல இருக்கிறது. பிறமொழிச் சொற்களை அப்படியே தமிழாக ஏற்றுக் கொள்ளலாம். உதாரணம் ஆங்கிலத்தில் கட்டுமரான். தனித்தமிழ் என்பது Fantastic Nonsense. புகைவண்டி என்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் புகை இல்லாத டீசல் வண்டி வந்தால் அதையும் புகைவண்டி என்றா சொல்வது? ரப்பர் என்பதை நெடுஞ்செழியன் ஒருமுறை என்னிடம் அழிப்பான் என்று மொழிபெயர்த்துச் சொன்னார். அது school class room க்கு சரி. ஆனால் Rubber sheet, Rubber ball என்னும் போது? ரப்பரைத் தமிழில் அப்படியே எழுதக்கூடாதாம். இரப்பர் என்று தான் எழுத வேண்டுமாம். இரப்பர் என்றால் பிச்சைக்காரன் என்று பொருள்.

தற்காலத் தமிழ் உரைநடையைப் பற்றி தங்கள் கருத்து?

கண்ணதாசன் பதில்:

எளிமையாக, வளமில்லாமல் போய்விட்டது. எல்லாருடைய எழுத்தைப் பற்றியும் என்னால் சொல்ல முடியாது. எனக்கு உரைநடை குழப்பக் கூடிய Complex sentence ஆக இல்லாமல் "அவன் வந்தான். அருகில் அமர்ந்தான்" என்று இருப்பது பிடிக்கிறது. "அவன் அங்கு வந்து அருகில் அமர்ந்த போது நாங்கள் அவனிடம் இதுவரை நாங்கள் விவாதித்ததை விளக்க முற்பட...." என நீட்டிக் கொண்டே போவது பிடிப்பதில்லை. எனக்கு பிடித்த உரைநடை ஆசிரியர்கள் கல்கி, தி.ஜ.ர.

புதுக்கவிதைகள் (Popular) பாப்புலராக முடியாதா?

கண்ணதாசன் பதில்:

அது எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் ஏற்படுகிற புரிந்து கொள்ளுதலைப் பொறுத்தது. 1945லிருந்து நானும் இவைகளைப் படித்துக் கொண்டுதான் வருகிறேன். அவைகள் ஒன்று கூட நிற்கவில்லை. இப்போது எதிலும் புதுமை வேண்டும் என்ற வேகம் இருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் காலத்தில் நிற்காது.

Comments

Post a Comment

Your feedback

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...