Skip to main content

அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்- பாலகுமாரன் (மலரும் நினைவுகள்)


என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.


ஆனால்,காலம் நகர நகர...வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். 


எனவே, அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழியலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.


எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல்.


‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள்.

 கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.


சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். 


இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.


“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.


“இல்லை. அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்து போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.


"எப்படித் தெரிந்தது,உனக்கு”


“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”


அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகி விடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.


ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டுதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.


“இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.


“உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”


“இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.


“விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான். நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம். அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”


இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும்.


“முன்னமே சொல்லி இருக்கலாமே”


“விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுபிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல... அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.


மாணவர்கள் செய்திப் பத்திரிகை படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். 


எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன், பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.


“பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்து கொண்டது.


அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான்.


“எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளே எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான்.


“ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றிச் சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள். தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.


கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான். ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.


“வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார்.


வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். 

ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்... மனைவிக்கும் விவரித்துச் சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.


“வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனப்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்- வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.


வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...