மகாபாரதப்போர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்தது. பதின்மூன்றாம் நாள் போரில் அபிமன்யு சூழ்ச்சியால் கொல்லப்படுகிறான். அபிமன்யுவை யாராவது எழுப்ப மாட்டார்களா என ஏங்குவதாக வில்லிபுத்தூரார் பின்வரும் பாடலைப் பாடுகிறார்.
அபிமன்யுவின் மாமன் உலகத்தையே காக்கும் தெய்வமான கண்ணபிரான். அபிமன்யுவின் தந்தை யாராலும் வெல்ல முடியாத அர்ஜுனன். அபிமன்யுவின் பாட்டனார் இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவன். அபிமன்யுவின் நண்பர்களாக உறவாக ஒரு கோடி அரசர்கள் இங்கு இருக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? அபிமன்யு இப்படித் தரையில் விழுந்து கிடக்கிறானே என்றெல்லாம் உள்ளம் கலங்குகிறார். இறுதியில் மனம் தெளிவடைந்து இந்த உலகத்தில் இப்படித்தான் நடக்கும் என விதிக்கப்பட்டிருந்தால் இந்த விதியை யாரால் வெல்ல முடியும் என ஒருவாறு அமைதியடைகிறார். அந்தப் பாடல்
மாயனாம் திருமாமன் தனஞ்செயனாம்
திருத்தாதை வானோர்க் கெல்லாம்
நாயனாம் பிதாமகன் மற்றொரு கோடி
நராதிபராம் நண்பாய் வந்தோர்
சேயனாம் அபிமனுவாம் செயத்திரதன்
கைப்படுவான் செயற்கை வெவ்வேறு
ஆயநாள் அவனிதலத்து அவ்விதியை
வெல்லும் விரகார் வல்லாரே' .
கடவுளே தாய் மாமனாக இருந்தாலும் இந்திரனே தாத்தாவானாலும் அர்ஜுனனே அப்பாவானாலும் இந்த நேரத்தில் இது நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அதை யார் மாற்ற முடியும். இதை அனுபவத்தில் நம் பெரியவர்கள் 'வாரது வந்தா வழியிலேயும் தங்காது' என சர்வசாதாரணமாகச் சொல்வார்கள்.
மனிதனின் துயரம் அனைத்திற்கும் மனம்தான் காரணம். இதைத்தான்,
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் கட்டி வைத்தவன் யாரடா?- அவை
எட்டுக் குஞ்சுகள் பெத்தெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா?
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா.
என, துன்பம் என்பது நிகழ்ச்சிகள் அல்ல; அதை எடுத்துக்கொள்ளும் மனசு தான் என்று கண்ணதாசன் சொல்லுவார்.
அது உண்மைதான். அதனால் தான் நம்மில் சிலர் சிறிய விஷயத்திற்கே பெரிய கவலையில் மூழ்கி விடுவர். சிலரையோ எந்தத் துன்பமும் எதுவும் செய்வதில்லை.
Comments
Post a Comment
Your feedback