குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் அந்தப் பூவெல்லாம் பாவம் என்ன பாடுபடுமோ! குரங்கு கையில் பூமாலையே அந்தப் பாடுபடும் போது குரங்குக் குட்டி கையில் முட்டை கிடைத்தால் ...
இந்தக் காதல் என்ற குரங்குக்குட்டியிடம் என் மனம் முட்டை போல மாட்டிக்கொண்டது.
காதல் வயப்பட்டுவிட்டால் பிரிவில் எங்கிருந்து வருமோ கண்ணீர்! அப்படித் தான் அவள் கண்களிலும் கண்ணீர்த் துளிகள்.
அழும் கண்களைப் பார்த்து ஆறுதல் கூறும் தன் தோழிக்கு அந்தப் பெண் கூறுகிறாள்.
காட்டு மயில் இருக்கிறதே, அது பாறை மேல் இட்ட முட்டையை எடுத்து, முசுக் குரங்கின் குட்டி வெயிலில் வைத்து உருட்டி விளையாடும். அப்படிப்பட்ட ஊர் அவன் ஊர்.
அவன் மேல் கொண்டுள்ள பிரியம் ரொம்ப நல்லது.
யாருக்கு நல்லது?
அவன் வேலை விஷயமாகப் பிரிந்து வெளியூர் போகும் போது யார் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியுமோ அவர்களுக்கு நல்லது.
அவன் வெளியூர் போக வேண்டி வந்தால் பிரிந்திருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணில் நீர் வழிய காத்திருக்கும் நமக்கெல்லாம் அது நல்லதில்லை.
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
(கபிலர் - குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback