இத்தனை நாளாகப் பழகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் இப்படியே இருக்க முடியாது. அதனால் முறைப்படி அவள் வீட்டுக்குச் சென்றுபெண் கேட்க முடிவு செய்கிறான்.
இப்படி முறைப்படி பெண் கேட்பதற்காக தன் உறவினரை அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். இந்தத் திருமணத்திற்கு அவர்கள் சம்மதிப்பார்களோ சம்மதிக்க மாட்டார்களோ என்று அவளுக்கும் கவலை. அப்படியான சூழலில் பெண் கேட்டு வந்த உறவினர்கள் இதோ வந்துவிட்டார்கள்.
அவர்கள் பெண் கேட்டு வரவிருக்கின்ற செய்தி அந்த பெண்ணின் வீட்டாருக்கு முன்பே சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் பெண்ணின் வீட்டில் அந்தப் பெண்ணின் தாய், தந்தை மற்றும் உள்ள நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே ஒரு சபை போல இருக்கிறது. பெண் கேட்க வந்தவர்களை அவர்கள் வரவேற்கிறார்கள். பெண்கேட்டு வந்த பெரியவர்களோ "நன்மை உண்டாகட்டும், நன்மை உண்டாகட்டும்" என்று வாழ்த்திக் கொண்டே வந்தார்கள்.
பெண் வீட்டில் இருக்கிற பெரியவர்களோ அதற்கு மறுமொழியாக "இந்த நாள் எங்களுக்குச் சிறந்த நாள், பெருமை தரும் நல்ல நாள்" என்று பதிலுக்கு வாழ்த்தினார்கள்.
அந்தப் பெண் இதையெல்லாம் தூரத்தில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் பேசுவது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அப்பொழுது அவள் மனதிலே ஒரு சந்தேகம். தன்னை அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா அல்லது மறுத்து விடுவார்களா என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் வந்த அடுத்த நொடியே அவள் மனதில் ஏதோ ஒரு பயம். அவள் முகத்தில் தோன்றுகின்ற இந்த மாற்றத்தைக் கண்ட அவளுடைய தோழி அவளை நெருங்கி வந்து சொல்லத் தொடங்குகிறாள்.
"நான் அந்தப் பக்கமாக சென்று வந்தேன். உன்னைப் பெண் கேட்டு வந்த அவர்களோ பெரிய மனிதர்கள். கையிலே கோல் வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய நரைத்த தலைமுடியே அவர்களின் பழுத்த வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லும்படி இருக்கிறது. தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள். வரும்போதே "நல்லது நடக்கட்டும்" என்று மங்கலமாக வாழ்த்திக் கொண்டே வந்தார்கள். நம் வீட்டில் இருக்கின்ற பெரியவர்களோ "நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்ததால் இந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று சொல்லி வரவேற்றார்கள்.
அவர்கள் சொன்ன அந்த நல்ல வார்த்தையும் நம்முடைய வீட்டுப் பெரியவர்கள் சொன்ன மறுமொழியையும் கேட்கும்போதே இதெல்லாம் நல்லது நடப்பதற்கான அறிகுறிகளாகவே எனக்குப்படுகிறது. நம்ம ஊரிலும் பிரிந்திருப்பவர்களைச் சேர்த்து வைக்கின்ற நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆகவே உன் சந்தேகத்தை விரட்டி விடு. உறுதியாக இந்தத் திருமணப் பேச்சு நல்லபடியாக நடக்கும்"
என்று கூறுகிறாள் தோழி.
இன்றைக்கு நடக்கும் திருமணப் பேச்சு அந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பிருந்த அதே அனுபவத்தைப் பேசுவது வியப்பான ஒரு செய்தி.
1.திருமணப் பேச்சு என்றாலே அந்தந்தக் குடும்பத்தில் உள்ள தன்மையான பெரியவர்கள் கலந்து பேசுவது.
2.பெண் கேட்க வரும்போது தேர்ந்தெடுத்த நல்ல வார்த்தையை சபையறிந்து பேசுவது.
3. அதற்கு இணக்கமான நல்ல மறுமொழி சொல்வது.
4. இன்றும் "நல்லது" என்று மங்கலமாகத் தொடங்குவது. "நல்லது" என்பதை அடுத்தே பேச்சைத் தொடங்குவது.
5. உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியை நிறைவாக வெளிப்படுத்த வயது முதிர்ந்த பெரியவர்கள் இருப்பது.
இப்படி, வழிவழியாக வந்த நல்ல மரபு இன்டர்நெட் காலத்திலும் மாறாமல் தொடர்வது ஆச்சரியத்தைத் தருகிறது.
அது தான் பண்பாட்டின் வலிமை.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.
(வெள்ளி வீதியார் - குறுந்தொகை)
சொல்லும் பொருளும்:
புணர்ப்போர் - திருமணம் கைகூட வைப்பவர்கள்
தண்டு - கைத்தடி, ஊன்றுகோல்
வெண்டலை - நரைத்த தலை
சிதவல் - தலையில் அணியும் துண்டு
மாக்கள் - வந்த பெரியவர்கள்
ஆங்கண் - அங்கே
கொல் - பொருள் இல்லாத சொல் (இலக்கணத்தில் அதை அசை என்று சொல்லுவார்கள்)
Comments
Post a Comment
Your feedback