பேச வேண்டும் போலத் தான் இருக்கிறது அவளிடம்.
இன்னும் பேசத் தான் முடியவில்லை.
அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் என்னிடம் ஏதோ சொல்வது போலவே இருக்கிறது.
என்ன என்று தான் புரியவில்லை.
அவள் வீடு எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
பெயரை இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் பல்லையே நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
முல்லை மலரையும் ஆம்பல் மலரையும் சேர்த்துக் கட்டி வைத்த பூச்சரம் போல இருக்கின்றன அவள் பற்கள்.
இப்போது என்னைக் கடந்து போகும்போது அவள் பாட்டுக்குப் போயிருக்கலாம்.
ஆனால் அவளோ திரும்பி என்னைப் பார்த்து விட்டுப் போய் விட்டாள்.
அவள் பார்த்த அந்தப் பார்வை மன்மதனிடம் என்னைக் கொன்று போடச் சொல்லியிருக்குமோ !
அவள் என்னைப் பார்த்தபோது 'இங்கேயே இரு வந்து விடுகிறேன்' என்று சொன்னது போலவே இருந்தது.
அது தான் நான் இங்கேயே இந்தக் கோவில் கோபுரத்தின் அருகேயே நின்றுகொண்டிருக்கிறேன்.
என்னை தெருவில் நிற்கச் சொல்லிவிட்டு அவள் என் நெஞ்சுக்குள் போய் நின்றுகொண்டாள்.
இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையும் பாரித்து
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லென்று போனாரென் நெஞ்சைவிட்டுப் போகாரே.
(தமிழ் நாவலர் சரிதை)
இல் - (அவள் ) வீடு
பாரித்து - கட்டி வைத்தது மாதிரி இருக்கிறது
Comments
Post a Comment
Your feedback