எங்காவது வெளியே போகவேண்டும் என்று புறப்பட்டு இன்னொரு நண்பன் வரட்டும் என்று காத்திருப்போம். காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து நிற்கும் போது "இதோ வந்துவிட்டேன்" என்று செய்தி வரும்.
செய்தி மட்டும் தான் வரும்; அவன் வரமாட்டான்.
வராமலேயே வந்துவிட்டேன் என்று சொல்வது தப்பு தானே. அதிலும் வந்துவிட்டேன் என்பது இறந்த காலம்.
வந்துவிட்டு அதன்பிறகு சொல்லவேண்டிய வார்த்தை அது. ஆனால் வருவதற்கு முன்பே "வந்துவிட்டேன்" என்று இறந்த காலத்தில் சொல்வது தவறு தானே.
"வந்துகொண்டிருக்கிறேன்" என்று நிகழ்காலத்தில் சொல்லலாம். அல்லது "இரண்டு நிமிடத்தில் வந்துவிடுவேன் " என்று எதிர்காலத்தில் கூடச் சொல்லலாம். "வந்துவிட்டேன்" என்று வராமலேயே சொல்லலாமா?
ரொம்ப அவசரமாக ஒரு செயல் நடக்கும்போது வருவதற்கு முன்பே வந்துவிட்டேன் என்று சொல்வது தப்பில்லை என்று தொல்காப்பியம் சொல்லும்.
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் என்மனார் புலவர்.
(தொல்காப்பியம்)
வாராக் காலம் என்றால் வருகின்ற காலம். இனிமேல் வரப்போகின்ற காலம். அதாவது எதிர் காலம்.
நிகழும் காலம் என்பது நிகழ் காலம்.
வேகமாகச் சொல்லவேண்டிய அவசியம் வந்தாலோ அல்லது வேகமாகச் செய்ய வேண்டிய அவசியம் வந்தாலோ அப்போது மட்டும் இனிமேல் நடக்க இருப்பதை நடந்துவிட்டதாகச் சொல்வது தவறில்லை என்பது தான் அதன் பொருள்.
ஓராங்கு - ஒரு சில சமயத்தில்
வரூஉம்- வருகின்ற
வினைச் சொல் - செயலைக் குறிக்கின்ற சொற்கள்
கிளவி - சொல்
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் - இறந்த கால குறிப்போடு இருப்பது
விரைந்த பொருள் -வேகமாக நிகழ்வதைச் சொல்ல
என்மனார் புலவர் - என்று புலவர்கள் கூறுவார்கள்
புது school bag வாங்கணும் என பையன் சொன்னவுடன் "Ok done" என்று சொல்வதெல்லாம் இந்த ரகம் தான். உடனே வாங்கித்தருகிறேன் என்பது தான் செய்தி.
வாங்கித் தருவதற்கு முன்பே done சொல்வது - 'நடக்கும் என்று சொல்வது' - ஒரு விதியாக 2000 வருடத்துக்கு முன்பே சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம்.
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இந்தக் குறள் கூட ஒரு நுட்பமான விஷயத்தைச் சொல்லும்.
நாலு பேருக்கு நடுவே நாம் இருக்கும் போது நாம் அணிந்திருக்கும் உடை நழுவி விழுந்துவிட்டால் பெருத்த அவமானதுக்குள்ளாவோம்.
ஆடை நழுவும் போது நம்மையும் அறியாமல் நம் கை ஓடிச் சென்று பிடித்து ஆடை கீழே விழாமல் காப்பாற்றும் இல்லையா, அது போல நாம் துன்பத்தில் இருக்கும்போது நம்மைக் காக்க ஓடி வந்து உதவும் நண்பன் இருக்க வேண்டும் என்பது தான் சொல்லவந்த செய்தி.
ஆடை நழுவி கீழே விழுவதற்கு முன் கை அந்த ஆடையை நழுவாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்தக் குறளில் வள்ளுவன் உடுக்கை இழந்தவன் (அதாவது ஆடையை இழந்தவன்) என்று தான் சொல்லி இருப்பான்.
ஆடை நழுவி விழுந்த பின் கை போய் உதவி செய்து என்ன பயன்? என்று நினைக்கக் கூடாது.
அது அப்படியல்ல.
கை செயல்பட வேண்டிய வேகத்தைக் காட்டவே நிகழ்காலத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு சொல்லுக்கு இறந்த காலத்தைப் பயன்படுத்தி இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment
Your feedback