அவள் தன் தோழியிடம் சொல்கிறாள்.
எடுப்பான வளையல் அணிந்த
என் தோழியே !
அன்றைக்கு ஒருநாள் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது, அங்கு ஒருவன் வந்தான்.
வேண்டுமென்றே எங்கள் மணல்வீட்டைக் காலால் கலைத்தான்.
நான் சூடியிருந்த மாலைகளைப் பிடுங்கிக்கொண்டான்.
எங்கள் பந்துகளையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.
இப்படியெல்லாம் செய்த அந்தக் குறும்புக்காரன் மறுபடியும் ஒருநாள் வந்தான்.
எங்கம்மாவும் நானும் தான் வீட்டில் இருந்தோம்.
“தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்றான்.
எங்கம்மா தண்ணீர் மொண்டுகொண்டு வந்து கொடுத்தாள்.
"அவன் குடித்த பிறகு சொம்பை வாங்கிக் கொண்டு வா" என்று என்னிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.
அது வரைக்கும் வந்திருப்பது அந்தக் குறும்புக்காரன் என்பது எனக்குத் தெரியாது.
திடீரென அவன் என் கையைப் பற்றி இழுத்தான்.
நான் பயந்து போய் "அம்மா இவனைப் பாரு" என்று கூச்சலிட்டேன். அலறிக்கொண்டு எங்கம்மா ஓடிவந்தாள். அவனோ என்னைப் பாவமாகப் பார்த்தான்.
நான் உண்மையை மறைத்து "அம்மா இவனுக்கு விக்கிக்கொண்டது என்றேன்". அதை நம்பிய அம்மா அவன் பின்னந்தலையைத் தட்டிவிட்டாள்.
அவனோ என்னைக் கடைக்கண்ணால் பார்த்தான். நான் சிரிக்க அவனும் சிரித் தான்.
அவன் சரியான திருடன் மகன்.
குறும்பு செய்ததெல்லாம் இவன்(இவர்கள்). திருடன் பட்டம் அவன் அப்பாவுக்கு.
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்.
(கபிலர் -கலித்தொகை 51)
Comments
Post a Comment
Your feedback