நோயால் வருந்தும் போது மருத்துவம் பார்க்கப் போகிறோம்.
மருத்துவன் நோய்தொற்றிய இடத்தை வாளால் அறுக்கிறான்.
கிருமித் தொற்று பரவாமல் இருக்க வலி தரும் சூடு வைக்கிறான்.
இத்தனை துன்பத்தையும் நாம் பொறுத்துக் கொள்கிறோம்.
ஆனாலும், மருத்துவன் மேல் கோபம் வருவதில்லை: பிரியம் தான் வருகிறது.
ஏனென்றால், நம்மைத் துன்பத்திலிருந்து விடுவிக்க மருத்துவன் நமக்கு மேலும் துன்பத்தைத் தருகிறான்.
பெருமாளே!
நீயும் மருத்துவன் போலவே இருக்கிறாய்!
நான் உன்னையே நம்பியிருக்கும் போதும் நீ எனக்கு மேலும் துன்பத்தைத் தருகிறாய்.
ஆனாலும் மருத்துவன் எப்படி நமக்கு நன்மை செய்யத் துன்பம் தருவானோ அது போல நீயும் எனக்கு நன்மை செய்யத் தானே மேலும் மேலும் துன்பம் தருகிறாய்?
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!
(குலசேகர ஆழ்வார்- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)
Comments
Post a Comment
Your feedback