தன் அன்புக்குரியவன் வேலைக்காக வெளியூர் செல்லத் திட்டமிடுகிறான்.
இதை அறிந்து வருந்தும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்கிறாள் அவள் தோழி.
எப்படி?
என் தோழி,
எங்கும் தண்ணீர் ததும்பி வழிகிறது.
அதனால் நம்முடைய மலை நிலம் முழுவதும் மரம் செடி கொடிகள் நன்கு செழித்து வளர்கின்றன.
பசுமையான சுனைக்குப் பக்கத்தில் பயிர்கள் முளைத்து வெளியே வருகின்றன.
நல்ல வைரம் பொருந்திய சந்தன மரங்களைச் சுற்றிலும் வாசனைக் கொடிகள் படர்கின்றன.
குறவர்கள் அந்தக் கொடிகளை வெட்டி அப்புறப் படுத்துகிறார்கள்.
நல்ல மழையைப் பொழிந்து முடித்துவிட்டு அந்த மேகங்கள் தெற்கு திசையில் படர்ந்து சென்றன.
முன்பனிக் காலம் தொடங்கியது.
இப்படிப்பட்ட இனிமையான காலத்தில், மனதுக்குப் பிடித்தவர்களை எப்படிப் பிரிந்து வாழ்வது?
அது ஏனோ அவனுக்குப் புரியவில்லை. வேலைக்காக உன்னை விட்டு எங்கோ செல்லத் தீர்மானித்துவிட்டான்.
ஆனால் தோழியே, நீ கவலைப்படவேண்டாம்.
உன் கண்களில் சிந்தும் நீர்த் துளிகள் இருக்கின்றனவே, அவற்றின் பலம் உனக்குத் தெரியாது.
அதைப் பார்த்தால் அவன் எங்கேயும் போகமாட்டான், பயணத்தைக் கைவிட்டு உன்னுடனே தங்கிவிடுவான்!
வேலைக்குப் போகாமல் தடுக்க இப்படி ஒரு கூட்டுச் சதி.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால் யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர்
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல்! இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே
(நற்றிணை-5)
Comments
Post a Comment
Your feedback