அவள்:
யார் இவன்? என் கூந்தலைத் தொடுகிறான். இது தப்பு. என் வீட்டுக்கு நீ வராதே.
வந்த வழியிலேயே திரும்பிப் போய்விடு,
அவன்:
அப்படிச் சொல்லாதே.
ஓர் உடலில் இரண்டு தலை கொண்ட பறவை போல நாம். அந்தப் பறவையின் இரண்டு தலைகளும் சண்டையிட்டுக்கொள்வது போன்று என்னிடம் சண்டைக்கு வராதே.
அப்படி என்னை விரட்டினால் நான் உடல் இல்லாத தலை ஆகி விடுவேன். அப்புறம் என் உயிர் பாவம் எங்கு போகுமோ?
அவள்:
ஏய் புரிகிறது உன் பேச்சுத் தந்திரம்!
உன் வஞ்சகப் பேச்சில் சுடுகாட்டில் இருக்கும் பேய்களின் தலைவிக்கே கூடப் பேய் பிடித்துவிடும் போல!
அவன்:
மன்னன் சினந்தால் அதனைப் போக்க மருந்து ஏதும் உண்டா என்ன?
உன் கோபமும் அப்படித் தான்.
என் மேல் கோபப் படாதே.
என்னிடம் ஒரு தவறும் இல்லை.
உன் இனிய புன்னகையால் நீ தான் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய்.
விடுபட முடியாமல் சிக்கிக் கொண்டேன்.
நான் குற்றமற்றவன்.
அவள்:
ஆகா! எல்லா வேலையையும் விட்டு விட்டு இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறான்.
இவனோடு பேசினால் நானே தோல்வியடைவேன்.
என் நெஞ்சே!
உனக்கும் இவனைப் பற்றித் தெரியும் தானே.
இனி மேலும் இவனைப் பொய் சொல்ல விடமாட்டேன்.
அதற்கு ஒரே வழி அவனை ஏற்றுக் கொள்வது தான்.
அவள்:
யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை
வாரல்; நீ வந்தாங்கே மாறு
அவன்:
என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் 5
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?
அவள்:
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து
அவன்:
மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த, 10
இன்னகை! தீதோ இலேன்
அவள்:
மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு! 15
( மருதன் இளநாகனார்-
கலித்தொகை 89 )
Comments
Post a Comment
Your feedback