கிரேக்க புராணத்தில் வரும் ஒரு கதை.
ஈயாஸ் (Eos) ஒரு பெண் தெய்வம். விடிந்தும் விடியாத காலைப் பொழுதுக்கான கடவுள். ஈயாஸ்க்கு ஒரு சாதாரண மனிதன் மேல் காதல். அவன் பெயர் டிதொன்ஸ் (Tithonus).
அவன் மனிதன் என்பதால் விரைவில் இறந்து விடுவான் என்பது ஈயாஸ்க்குத் தெரியும். அவனை எப்படி சாகாமல் வைத்திருப்பது என்று யோசிக்கிறாள்.
சியஸ்(Zeus) என்பது எல்லாக் கடவுள்களுக்கும் பெரிய கடவுள். ஈயாஸ், சியஸ்சிடம் செல்கிறாள். எல்லாவற்றையும் சொல்லி, தன் காதலன் டிதொன்ஸ் இறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற தன் கவலையைச் சொல்கிறாள்.
அவள் மேல் இரக்கம் கொண்ட சியஸ் அவள் கேட்கும் வரத்தைத் தருவதாகச் சொல்கிறார்.
அவள் உடனே டிதொன்ஸ் இறந்து விடக்கூடாது என்று கேட்கிறாள்.
அவரும் சாகா வரம் தந்து விடுகிறார்.
அவள் வாங்கி வந்தது வரம் அல்ல சாபம் என்று பிறகு தான் புரிந்தது.
ஏன், என்ன ஆச்சு?
நாட்கள் ஓடின. 100 ஆண்டுகளைக் கடந்த போது, டிதொன்ஸ் மனிதன் என்பதால் அவனுக்கு கண் பார்வை மங்கிவிட்டது. காது கேட்கும் திறன் போய்விட்டது. தோல் எல்லாம் தொங்கிப் போய்விட்டது. படுத்த படுக்கையாகவே கிடந்தான். உடல் வலி வேறு.
இந்தத் துன்பம் எல்லாம் இன்னும் சில காலம் தான். மரணம் வந்து விடும் என்று நினைக்க வழியில்லை. அவனுக்கு கொடுக்கப்பட்ட வரத்தால் அவன் எப்போதும் இறக்க முடியாது.
வரம் என்ற பெயரில் வலியப் போய் வரவழைத்துக் கொண்ட நரகம் அது.
எது முன்னமே கொடுக்கப்பட்டதோ அது சரியானது. கேட்டு வாங்கும் வரம் எல்லாம் வரமல்ல.
Comments
Post a Comment
Your feedback