இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரும் நாட்களில் இப்படியெல்லாம் கூட படிக்க வேண்டியிருக்கலாம்.
இந்திய சமூகத்தில் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு வாழ்க்கை முறை இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தக் கூட்டுக்குடும்ப முறை குறித்துக் கூறப்படுவன.
தாய், தந்தை, சகோதரர்கள் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசித்து வந்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் ஒரே சமையல் அறையில் சமையல் செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது.
அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டிருக்கலாம் என்றும் பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
குடும்பத்தின் சொத்துக்கள் பிரிக்கப் படாமல் இருந்திருக்கிறது.
குடும்ப வருமானம் குடும்பத் தலைவனிடம் கொடுக்கப்பட்டு அவனே குடும்பத்திற்கான செலவுகளை செய்து வந்திருக்கிறான்.
சிறியவர்கள் பெரியவர்களிடம் மரியாதையுடன் கீழ்ப்படிந்து நடந்து வந்திருக்கின்றனர்.
பெரியவர்கள் அந்தக் குடும்பத்தின் சிறியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருக்கிறார்கள்.
சிறுவர்கள் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. அது ஒருவேளை பண்பாடற்ற செயலாகக் கூட பண்டைய நாட்களில் கருதப்பட்டு வந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், இது நம்பும்படியாக இல்லை என்றும் இது முழுக்க முழுக்க ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆய்வாளர்களின் கற்பனை என்றும் சமூக ஆர்வலர்கள் இதை மறுத்துள்ளார்கள்.
Comments
Post a Comment
Your feedback