நதி, நிலமகள் அணிந்துள்ள ஆபரணம். வானிலிருந்து பார்க்கும் போது அந்த அழகைப் பார்க்கலாம்.
மொழியின் ஆபரணம் கவிதை.
நதி, தான் வரும் போது வெறுமனே வராமல் நல்ல பொருள்களையும் கூடவே கொண்டுவரும். சுந்தரவனக் காடுகள் கூட நதி தரும் வரம் தான்.
ஒரு நல்ல பொருளைத் தருவதே கவிதை .
ஓடி வரும் நதி, ஐம்புலன்களும் மகிழ்ச்சியைத் தரும். மனதுக்குள் குளுமை படரும். நல்ல கவிதையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையும்.
ஓடி வரும் போது ஐவகை நிலங்களையும் தொட்டு வருவதால் ஐந்திணை வழி நடக்கிறது நதி. கவிதையும் ஐந்திணையைப் பாடும்.
குளிர்ந்த நீரும் தெளிந்த நீரும் நதிக்கு அழகு. இனிமையும் நீர்மையும் கவிதைக்கு அழகு.
நதி கரைகள் என்ற இலக்கண வரம்புக்குள் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கவிதை.
ஆகவே , கோதாவரி நதியே நீ கவிதை தான்.
புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
(கம்ப ராமாயணம்)
Comments
Post a Comment
Your feedback