நல்ல குளிர் காலம்.
மழை வேறு விடாமல் பலமாகப் பெய்து கொண்டிருந்தது.
குளிரால் நடுங்கிய அந்த நாய் ஓரிடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது.
குளிரில் அது வெடவெடத்தது.
தனக்கென ஒரு சிறு வீடு இருந்தால் கூட, இப்படி எல்லாம் துன்புற வேண்டாமே என்று எண்ணியது.
எப்படியும் சீக்கிரம் ஒரு வீட்டை தேடிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது.
ஒருவழியாக மழை நின்றது. குளிரும் போன இடம் தெரியாமல் போய்விட்டது.
சுருண்டு படுத்திருந்த நாய் இப்போது நன்றாக உடலை நீட்டி வசதியாகப் படுத்துக் கொள்ளத் தொடங்கியது.
குளிரில் நடுங்கும் போது யோசித்த சிறு வீடு யோசனை தள்ளிப் போடப்பட்டது. இவ்வளவு அழகாக நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்ளும் அளவுக்கு அந்த வீட்டில் வசதி இருக்குமா என்று இப்போது யோசித்தது.
இது ஒரு ஈசாப் கதை.
அடுத்து மழையிலும் குளிரிலும் மாட்டிக்கொள்ளும் வரை அந்த நாய்க்கு இனி வீடு பற்றிய சிந்தனை வராது.
இப்படி தீவிரமாக யோசித்த ஒரு விஷயம் கிடப்பில் போடப்படுவதை ஆங்கிலத்தில் Cold storage ideas என்று சொல்வார்கள்.
அதாவது ஃப்ரிட்ஜ் குள் போட்டு வைக்கும் மிச்சம் மீதி சட்னி, சாம்பார் போல சில யோசனைகள் பத்திரமாக போட்டு வைக்கப்படும்.
அந்த நாய்க்கு வீடு தேடும் யோசனை போல நமக்கு நாள்தோறும் cold storage ideas வந்துகொண்டே இருக்குமாம். அந்த யோசனையைச் செயல்படுத்தவும் மாட்டோம்.
சில நேரங்களில் அப்படியொன்று பிரிட்ஜ்குள் கிடக்கிறது என்பது கூட தெரியாமலேயே போய்விடுகிறது.
"அதுக்கெல்லாம் ஒரு நேரம் வரணுமில்ல" என்று சொல்லிச் சொல்லியே குப்பையில் போட வேண்டியதைக் கூட பிரிட்ஜ் குள் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதே நேரம் ஃப்ரிட்ஜ்குள் போட்டு வைக்க வேண்டிய வேண்டாத கவலைகளையெல்லாம் கைக் குழந்தையைப் போல கவனமாகக் கூடவே அணைத்துப் பிடித்துக் கொள்கிறோம்.
இப்படியாக நம் நாட்கள்...
Comments
Post a Comment
Your feedback