அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் 56 இன்ச் மார்பளவைப் பற்றிப் பேசியதைக் கவனித்திருப்போம். 56 இன்ச் மார்பளவு என்பது டெய்லர் எடுக்கும் சட்டை அளவுக்காகச் சொல்லப்படுவதல்ல. அது வலிமையான தலைமைப் பண்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் கூறப்படும் ஒரு குறியீடு. Metaphorical expression போல அதைச் சொல்லலாம். ஒரு நாட்டின் தலைவன் என்றால் ஓய்வும் உறக்கமும் இல்லாமல் சோர்வாக இருந்தாலும் ஓயாது உழைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் நூற்றுக்கணக்கான ஆலோசனைகள் வரும். அதில் முடிவெடுக்கும் திறன், வருமுன் அறிதல், விளைவுகளை எதிர்கொள்ளுதல், கடினமான நேரங்களில் தன்னிலை பிறழாமல் துவண்டு போகாமல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாதுரியம் என எல்லாவற்றுக்குமான குறியீடு அது. 56 இன்ச் மார்பளவு என்பது என்னவோ உடல் அளவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொள்பவர்களும் உண்டு. கம்ப இராமாயணம் கூட இந்த மார்பளவைப் பற்றிக் கூறுகிறது. காதோரம் வெள்ளை முடி வந்தவுடன் தசரதன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று கருதுகிறான். தான் இத்தனை ஆண்டுகளாகச் சுமந்த அந்த அரச பாரத்தைத் தாங...