நொச்சி மரமே! காதலர்கள் அமர்ந்து பேசி மகிழ்வதற்கு வசதியாக நல்ல நிழலோடு மறைவான இடமும் தருகிறாய். அதனால் நாங்கள் உன்னைக் காதல் மரம் என்று கூறுவோம். பெண்கள் உடுத்தும் ஆடையாக நீ விளங்குகிறாய். அரணாக விளங்கும் எங்கள் மதிலைக் கடக்க நினைக்கும் எதிரிகளை வென்ற எங்கள் வீரர்களின் தலையில் வெற்றிப் பூவாகவும் விளங்குகிறாய். நீ வாழ்க! மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி! போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே! கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. (புறநானூறு 272)