Skip to main content

ரஷ்யா-உக்ரைன் போரும் கச்சா எண்ணெய் விலையும்

ரஷ்யா-உக்ரைன் போரும் கச்சா எண்ணெய் விலையும்

 

 ரஷ்யா இப்போது உக்ரைனை ஆக்கிரமித்துக் கொள்ளும் முயற்சியில் போரில் இறங்கியிருக்கிறது. இதன் காரணமாக, பல நாடுகளால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை இப்போது நிச்சயமாகக் கூற முடியாது.

 

அது சரி, ரஷ்யப் பகுதிகளில் இருக்கின்ற இந்த நிலைக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அல்லது  உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஏன் கவலைப்பட வேண்டும்?

 

 ஏனென்றால் மனிதாபிமான அடிப்படையில் ஒரு போர் என்பது மோசமானதாக கருதப்பட்டாலும் உலகம் முழுவதும் கவலைப்படுவதற்கு முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் தான். 

 

ஏப்ரல் 2020 உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை கோவிட் பரவலின் காரணமாக ஒரு பீப்பாய்க்கு 16 டாலராக குறைந்தது. இந்த விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக கச்சா எண்ணெய் உற்பத்தி குறைத்துக் கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பழைய நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. 

 

டிசம்பர் 2021-ல் ரஷ்யா-உக்ரைன் பதட்டம் அதிகரித்தபோது, ஏற்கனவே அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்கும் நிலையை அடைந்தது. கடந்த 2021 நவம்பரில் 70 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை அதன் பின்பு டிசம்பரில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவீத லாபம். 

 

 2022 பிப்ரவரியில், அதிகபட்சமாக 105.8 டாலரை எட்டி, தற்போது 100 டாலர் என்ற அளவிலேயே இருக்கிறது. 

 

உலகத்தின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கும் ரஷ்யாவின் மீது உலக நாடுகள் விதிக்கும் பொருளாதார தடை இந்தியாவிற்கும் சிரமத்தைத் தரும். ஏனென்றால் இந்தியா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

 

OPEC நாடுகளின் செயல்பாடுகள்:

 

கச்சா எண்ணெய் விலையை பாதிக்கின்ற அடிப்படைகள் சிலவற்றை இப்போது கவனிக்கலாம்.

 

2021 அமெரிக்க எரிசக்தித் தரவுப் புள்ளிவிபரங்களின்படி, ரஷ்யா ஒரு நாளைக்கு10.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அதாவது10.8 MMbpd.

MMbpd என்பது Million Barrels per day என்பதன் சுருக்கம். Million என்றால் பத்து லட்சம் என்பது நமக்குத் தெரியும். உலக உற்பத்தியில் ரஷ்யா இரண்டாவது இடம். அதே நேரத்தில் ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஐரோப்பா தினமும் 4 மில்லியன் பீப்பாய்களையும் (4MMbpd), சீனா தினமும் இரண்டு மில்லியன் பீப்பாய்களையும் (3MMbpd) ரஷ்யாவில் இருந்து வாங்குகின்றன. 

 

ஐரோப்பிய எரிசக்தி கமிஷன் தலைவர் வான் டெர் லெயன் எண்ணெய் சுத்திகரிப்புக்கான ஏற்றுமதிக் கருவிகளில் கட்டுப்பாட்டை அறிவித்தார். இந்தக் கருவிகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக ரஷ்யாவில் எரிசக்தி உற்பத்திக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஐரோப்பா எடுத்த இந்த நடவடிக்கை ஐரோப்பாவையும் கூடப் பாதிக்கும். ஏனென்றால் ஐரோப்பாவின் தேவையில் 30% எரிபொருள் ரஷ்யாவிலிருந்து தான் வருகிறது. எனவே இதை ஈடுசெய்ய அமெரிக்காவிலிருந்தோ பிற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்தோ அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். சரி அப்படி வெளியிலிருந்து வாங்குவதாக இருந்தால் எங்கே இருந்து வாங்குவது?

 

மத்திய கிழக்கு நாடுகளுடன் ரஷ்யா நெருக்கமாகவே இருக்கிறது. குறிப்பாக சவுதி அரேபியா கிட்டத்தட்ட 10MMbpd கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றது. அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் மூன்றாவதாக இருக்கிறது. 

 

OPEC என்பது ரஷ்யாவைத் தவிர மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ளடக்கிய ஒரு அமைப்பு. உலக உற்பத்தியில் சரிபாதி OPEC நாடுகளில் இருந்தே உற்பத்தியாகிறது. எனவே பொருளாதார தடைகளால் ரஷ்யாவிலிருந்து வருகின்ற கச்சாஎண்ணெய் கிடைக்காதபோது ஐரோப்பிய நாடுகள் OPEC நாடுகளை நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. எனவே OPEC நாடுகள் கூடுதலாக விநியோகிக்க வேண்டும் என்று ஐரோப்பா கோரிக்கை வைக்கும். என்னதான் ரஷ்யாவோடு  நல்ல உறவை சவுதி அரேபியா பராமரித்து வந்தாலும் மற்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை சவுதிஅரேபியா தொடர்ந்து புறக்கணிக்க முடியாது.

 

கோவிட் தொற்றால் தேவை குறைந்து எண்ணெய் விலை குறைந்தபோது ஏப்ரல் 2020 இல் OPEC நாடுகள் 10MMbpd உற்பத்தி குறைப்பை அறிவித்தன. அதாவது தினமும் 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

 அதன்பின்பு தினமும் 5.8 MMbpd என்ற அளவிலேயே உற்பத்திக் குறைப்பு இருந்தது. இப்படி உற்பத்திக் குறைப்பு மூலமாக கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என்ற அந்த நாடுகளின் நோக்கம் ஓரளவு நிறைவேறியது.

ஆகஸ்டு 2021 உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் எண்ணெய்த் தேவை அதிகரித்தது. எனவே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்த நாடுகள் முடிவு செய்தன. உற்பத்தியை விடவும் தேவை அதிகமானதால் தினமும் 0.95MMbpd அளவு பற்றாக்குறை இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பீப்பாய்கள் விநியோகத்தை அதிகரிப்பது என்பதை இலக்காகக் கொண்டு அந்த நாடுகள் செயல்படுகின்றன. இந்த அளவிற்கு மேலும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்த போதிலும் சமீபத்தில் நடைபெற்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் நாடுகள் கூட்டத்தில் இதே நிலையை தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே இப்போதைய நம்பிக்கை என்பது ரஷ்யா உக்ரைன் போர் பதட்டம் தீர்ந்த பின்பு இந்த தற்காலிக விலை உயர்வு சரி செய்யப் படலாம் என்பது தான்.

 

ஈரானின் கச்சா எண்ணெயும் அமெரிக்காவின் உபரி ஷேல் எண்ணெயும்:

 

எது எப்படியிருப்பினும் 2022-ல் கச்சா எண்ணெய் உற்பத்தி 101.4 MMbpd என்ற அளவிலும் தேவை MMbpd என்ற அளவிலும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உபரியாக 0.8MMbpd அளவு எண்ணெய் கையிருப்பு இருக்கும்.

 

ரஷ்யா 7.4 MMbpd ஏற்றுமதி செய்வதை கருத்தில் கொண்டால், ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகளின் தடைகள் தொடர்ந்து இருந்தாலும் சீனா தொடர்ந்து ரஷ்யாவிடமே எண்ணெய் வாங்கும். அப்போதும் கூட இதுவும் மற்ற நாடுகளுக்குப் போதுமானதல்ல. இது பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். அப்போது கச்சா எண்ணெயின் விலை மேலும் உயரக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும். பணவீக்க விகிதம், உலகில் எந்த நாடும் விரும்பாத போர் நிகழ்வுகளும் இதில் முக்கியமானவை. அப்போது விலை ஒரு பீப்பாய் 115 முதல் 120 டாலர் வரை உயரலாம். 

 

இந்த நிலையில் விலையைக் குறைப்பது என்பது ஈரானில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் கூடுதலாக எண்ணெய் கிடைப்பதைச் சார்ந்தே இருக்கும்.

 

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளை உள்ளடக்கி 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட JCPOA என்ற அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளியேறி ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் 2017 இல் 3.82 MMbpd என இருந்த ஈரானின் எண்ணெய் உற்பத்தி 2019 இல் 1.86MMbpd என்ற அளவுக்கு குறைந்தது. தற்போது பைடன் நிர்வாகத்தில் இருக்கிற அமெரிக்கா மீண்டும் அந்த 2015 ஒப்பந்தத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. அதற்காக ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் பேச்சுவார்த்தையும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இப்பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஈரான் மீதான தடைகள் விலக்கப்பட்டால் ஈரானிலிருந்து 2.4MMbpd உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் ரஷ்யாவினால் ஏற்பட்ட வினியோக இழப்பை ஓரளவு சரி செய்ய முடியும். இதற்கிடையில் அமெரிக்கா உற்பத்தி அதிகரிக்குமாறு ஈரானை வற்புறுத்தும். அதே நேரத்தில் உற்பத்தி அதிகரிக்க வேண்டாம் என எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும். இதெல்லாம் இந்த எண்ணையை மையமாகக் கொண்டு இருக்கின்ற அரசியல் விளையாட்டுகளுள் சிக்கிக் கொண்ட  பொருளாதாரப் பிரச்சினைகள் .

 

அமெரிக்கா தற்போது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக உள்ளது. 

 

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அமெரிக்கா வழக்கமான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பதிலாக ஒருவித படிவுப் பாறைகளிலிருந்து (sedimentary rocks) எடுக்கப்படும் ஷேல் எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இந்த எண்ணெய் இறக்குமதிக் கச்சா எண்ணெயையே நம்பியிருக்க வேண்டிய நிலையிலிருந்து அமெரிக்காவை மாற்றிவிட்டது. உண்மையில் அமெரிக்கா இப்போது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்காவின் இந்த எண்ணெய் உற்பத்தியின் காரணமாக ஜூன் 2014 இல் 112 டாலர் என்று அளவில் இருந்த விலை டிசம்பர் 2015 இறுதிக்குள் 37 டாலராக குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்காவின் இந்த உற்பத்தி மற்றும் விநியோகம் காரணமாக தேவைக்கும் அதிகமாக கையிருப்பு இருக்கும் எண்ணெய் அளவு 0.8 MMbpd யிலிருந்து 1.8 MMbpd என்றவாறு அதிகரித்தது. 

 

இந்த ஷேல் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாக இருந்த போதும் அதிகப்படியான தொழில்நுட்ப முதலீடுகள் தேவையானதாக இருந்தது. அதே நேரத்தில் ஷேல் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கான சந்தையை உறுதி செய்வதற்காக உற்பத்தி செலவை ஒட்டி சந்தை விலையை மிகக் குறைவாக நிர்ணயித்தன. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக இந்த எண்ணெயை எடுப்பதற்கான செலவு மிகமிகக் குறைந்திருக்கின்றது. 2014 இல் உற்பத்தி செலவு 80டாலராக இருந்தது. ஆனால் 2021 இல் அது 50 டாலரில் உற்பத்தி செய்ய முடியும் அளவுக்கு குறைந்து விட்டது. எனவே ஷேல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையை தங்களுக்கு சாதகமானதாகக் கருத முடிந்தது.

 

தற்போது அமெரிக்காவில் இந்த எண்ணெய் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ஆற்றல் தொழில்நுட்ப நிறுவனமான பேக்கர் ஹக்கஸ் (Baker Hughes) கணக்கின்படி கடந்த ஆண்டு 305 எண்ணெய் துளையிடும் ரிக்குகள் செயல்பட்ட நிலையில் இப்போது 520 ரிக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக செல்லும் என்றால் அமெரிக்கா தன்னுடைய உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும்.

 

வரும் நாட்கள் இந்தியாவிற்கு எப்படி இருக்கும்?

 

இந்தியா அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்ற ஒரு நாடு. எனவே கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கின்ற பொழுது இந்தியா பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும். இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இந்தியா 94.2 பில்லியன் டாலர் செலவில் 175.9 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 163 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கான செலவு 47.2 பில்லியன் டாலர் மட்டுமே. அதாவது ஒரே ஆண்டில் கச்சா எண்ணெய் செலவு மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

அதே நேரத்தில் பொருளாதாரம் தற்போது மேம்பட்டு வருவதால் இறக்குமதி அளவும் கூடத்தான் செய்யும். இது ரூபாயின் மதிப்பை குறைக்கலாம். ஏற்கனவே டாலர் மதிப்பில் ரூபாய் 1.3 சதவீதம் அளவுக்கு குறைவாக உள்ளது. இந்த ஆண்டில் நேரம் பற்றாக்குறை நிலைமையை இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம். 

 

2022 நிதியாண்டின் முதல்பாதியில் பற்றாக்குறை 3 பில்லியன் டாலராக இருந்தது. அதேநேரம் அதற்கு முந்தைய ஆண்டு 34 பில்லியன் டாலர் உபரி நிதி இருந்தது.

 

இனி உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் போது கச்சா எண்ணெயின் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கலாம். கச்சா எண்ணெய் சார்ந்த பொருள்களை மூலப் பொருளாக பயன்படுத்தும் இந்திய நிறுவனங்களின் லாபம் இதன் மூலமாக பாதிப்புக்கு உள்ளாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு நேரும். அதே நேரம் ONGC , Oil India போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் பயனும் கிடைக்கும். 

 

விமானப் போக்குவரத்து என்பதில் 40 சதவீத எரிபொருள் செலவு கச்சா எண்ணெய் சார்ந்தது தான்.

 

 பெயிண்ட் மற்றும் தயிர் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீத செலவு கச்சா எண்ணெய் சார்ந்ததுதான். எண்ணெய் வினியோக நிறுவனங்களுக்கும் நிறைய சவால்கள் தோன்றும். ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்களை விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிற விலைக் கொள்கை ஒருபுறம். அரசாங்கத்தின் மறைமுகமான கட்டுப்பாடுகள் மறுபுறம். இந்த இரண்டுக்கும் நடுவில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் சிக்கிக்கொள்ளும். எனவே கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது என்றால் எந்த வகையிலும் அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்காது இந்தியாவினுடைய வியாபார வாய்ப்புகளையும் அது பாதிக்கவே செய்யும்.


Translation of the article written by Akhil Nallamuthu, published on 27.02.2022 Hindu Business Line

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...