கண்ணனைத் தன் தாயாகப் பாவித்து பாரதி பாடிய பாடல் இது.
வானம் பூமி எல்லாமே கண்ணன் வடிவாய் இருக்க நான் குழந்தையாக இருக்கிறேன். குழந்தையான என்னை வானம் தன்னுடைய இரு கைகளில் அள்ளி எடுத்து பூமித் தாயின் மடியில் வைத்தது. என் பிஞ்சு வாயில் பாலூட்டி மனம் மகிழ்வாள் என் அன்னை. அந்த அமுதம், தெவிட்டாத சுவையில் உயிரையும் உள்ளத்தையும் நிறைக்கும். குழந்தையாய் அவள் மடியில் நான் இருக்க பல கதைகள் சொல்லி என்னை மகிழ்விப்பாள்.
எத்தனை எத்தனை கதைகள்.
இன்பமாகச் சில கதைகள்.
அவை என்னை
மேன்மைப்படுத்துவதாகவும் எனக்கு வெற்றி தருவதாகவும் அமைந்திருக்கும் கதைகள்.
துன்பமாகச் சில கதைகள்.
தோல்வியைக்
குறித்தும் வீழ்ச்சியைக் குறித்தும் எனக்கு அறிவு தரும் அந்தக் கதைகள்.
என் வாழ்வின் பருவங்களுக்கு ஏற்ப
வயதுக்குப் பொருத்தமான கதைகளை அன்போடு அவள் என் விருப்பம் அறிந்து சொல்லி
வருவாள்.
அந்தக் கதைகளில் என் மனம்
பரவசத்தில் திளைக்கும்.
உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும்
பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். ... 1
இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2
Comments
Post a Comment
Your feedback