டி.வி யை இடியட் பாக்ஸ் என்று சிலர் கூறுவார்கள். யாரையெல்லாம் எளிதாக முட்டாளாக்க முடியுமோ அவர்களை எல்லாம் தன்னை விட்டுப் போக முடியாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பெட்டி என்பதால் டி.வி யை முட்டாள்களின் பெட்டி அல்லது இடியட் பாக்ஸ் என்று கூறுகிறார்கள். அது சரி தான்.
அதே நேரத்தில் சிலர் டிவியை பண்டோராவின் பாக்ஸ் (Pandora's box) என்று சொல்கிறார்கள்.
அது யார் பண்டோரா?
ஏன் டிவியை அப்படிச் சொல்கிறார்கள்?
அதற்கு இந்தக் கிரேக்கப் புராணக் கதை தான் காரணம்.
எல்லாக் கடவுள்களுக்கும் பெரிய கடவுள் சியோஸ்(Zeus). அந்தக் கடவுளின் கட்டளைப்படி பூமியில் ஒரு பெண் உருவாக்கப்படுகிறாள். மண்ணையும் தண்ணீரையும் கலந்து அந்த பெண் உருவாக்கப்பட்டாள். அவள் பெயர் தான் பண்டோரா. அவளுக்கு அழகு, கல்வி என எல்லாவற்றையும் மற்ற கிரேக்கக் கடவுள்கள் கொடுத்தனர்.
பண்டோராவுக்கு சியோஸ் ஒரு அழகிய ஜாடியைப் பரிசாகக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அதை எப்போதும் திறக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். ஆனால் ஆர்வக்கோளாறு காரணமாக பண்டோரா அதைத் திறந்தாள். உடனே அந்த ஜாடிக்குள் இருந்த அத்தனை தீய சக்திகளும் ஜாடியை விட்டு வெளியேறி எல்லாப் பக்கமும் பரவின. மூட முயற்சித்தும் தீய சக்திகள் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. ஆனால் இப்படித்தான் நடக்கும் என தெரிந்திருந்த சியோஸ் அவளைத் தண்டிக்கவில்லை. அமைதியாக விட்டுவிட்டார்.
ஆக மூடி வைத்த ஒரு ஜாடிக்குள் (பெட்டிக்குள்) இருந்த அத்தனை தீமைகளும் நமக்கே தெரியாமல் எல்லாப் பக்கமும் பரவி விடுவதால் தான் டி.வி.யையும் பண்டோர பாக்ஸ் என்று கூறுகிறார்கள்.
டி.வி யை ஆன் பண்ணிய உடனே உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட எண்ணங்களும் தீய செய்திகளும் மழுங்கடிக்கும் பொழுது போக்குகளும் நம் வீட்டிற்குள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. நம்மை முழுதாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. குழந்தைகள் முதல் ஒவ்வொருவருடைய மனதுக்குள்ளும் புகுந்து கொள்கின்றன.
Pandora box என்பதற்கு அறியாமலேயே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளுதல் என்று பொருள். அதாவது something that creates new and unexpected problems.
டி.வி பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் அதைத் தானே செய்கிறோம். இல்லையா?
Comments
Post a Comment
Your feedback