"புது கார் புக் பண்ண போறீங்களாமா?"
"அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"
"காத்துவாக்குல காதுல விழுந்துச்சு'.
இது போன்ற உரையாடல்கள் நம் காதில் விழுந்திருக்கும்.
'காத்துவாக்குல' என்பது ஒரு விஷயத்தைக் குறித்துத் தெரிந்து கொள்வது. அந்த விஷயத்தை மற்றவர்களை விட கொஞ்சம் முன்பாகவே தெரிந்துகொள்வது. எல்லோருக்கும் தெரிந்த பின் ஒரு விஷயத்தை ''காத்துவாக்குல" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி முன்னதாகக் கேள்விப்படுகிற செய்தி உண்மையா இல்லையா என்று தெரியாதபோது 'அரசல் புரசலாகக்' கேள்விப்பட்டதாகச் சொல்லி விடுவதுண்டு.
காற்றில் வரும் வாசம் முகர்ந்தால் தெரியும். காற்றில் வரும் ஓசை கேட்டால் தெரியும். எனவே கவனிக்கத் தெரிந்தவர்களுக்கு காற்று ஒரு கருவூலம்.
பொதுவாகவே மனிதர்களை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம். விலங்குகள் தனக்கான இறையை மோப்ப சக்தியைக் கொண்டே உணர்கின்றன. அப்படி மோப்பம் பிடிக்க காற்று அவசியம். காற்றில் அவை மோப்பம் பிடிப்பதை சில நேரங்களில் அவற்றின் மேனரிஸத்தைப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான நேரங்களில் தன்னுடைய இரை எங்கிருக்கிறது என்று கண்ணால் பார்ப்பதற்கு முன்பாகவே அங்கேதான் இருக்கிறது என மோப்பசக்தியாலேயே அவை locate செய்து கொள்கின்றன.
விலங்குகளின் இந்த அசாத்தியமான மோப்பம் பிடிக்கும் திறமையைக் கவனித்து நாமும் அதை நம் பேச்சு வழக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
"குற்றவாளிகளை போலீஸ் மோப்பம் பிடித்து நெருங்கி விட்டனர்"
"We are able to smell his criminal mind"
என்பதெல்லாம் அப்படிப்பட்டவை.
சில சதித்திட்டங்களை முன்கூட்டியே கண்டுபிடித்து, குற்றவாளிகளைக் கைது செய்த பின்பு போலீஸ் அதிகாரிகள் பேட்டி கொடுப்பதைப் பார்த்திருப்போம்.
அப்போது,
The police got the wind of a plot to assassinate the Top Leader of the nation.
என்பது போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துவார்கள். சொல்லும் செய்தி விசாரணையைப் பாதிக்காமல் இருப்பதற்காக எப்படிக் கண்டுபிடித்தனர் என்பதை வெளியே சொல்ல மாட்டார்கள். அதற்கு வசதியாக அவர்கள் பயன்படுத்துகின்ற மரபுத்தொடர் get wind of . இந்த get wind of என்பது நாம் சொல்லும் "காற்றுவாக்கில்" தானே.
மரபுகள் பல நேரம் மொழிகளைக் கடந்தும் பயணிக்கின்றன. ஏனென்றால் அவை காலம் காலமாக வாய்மொழி வழக்கில் வாழ்ந்து வருகின்றன.
Comments
Post a Comment
Your feedback