இது குறுந்தொகையின் முதல்பாடல்.
தான் விரும்பிய பெண்ணைப் பார்க்க வருகிறான் அவன். அந்தப் பெண் அங்கு இல்லை. அங்கு இருந்த அவளது தோழியிடம் தலைவியிடம் கொடுக்குமாறு காந்தள் மலர்க் கொத்துக்களைத் தருகிறான். அதை அவள் வாங்க மறுத்துக் கூறியது தான் இந்தப் பாடலின் செய்தி.
பாடல் தரும் செய்தி:
இது வீரவளை கொண்ட முருகப்பெருமானின் மலை.
போர்க்களமே ரத்தத்தால் சிவப்பாகும்படி அசுரர்களைக் கொன்று, அந்த இரத்தம் தோய்ந்த சிவந்த அம்பைக் கொண்ட முருகப்பெருமானின் மலை.
அசுரர்களைக் குத்தியதால் தந்தங்கள் சிவந்து போன யானைகள் இருக்கின்ற முருகப் பெருமான் மலை.
இந்த மலையில் ரத்த நிறத்தில் சிவந்து இருக்கின்ற காந்தள் மலர்க் கொத்துக்கள் எங்கும் பூத்துக்கிடக்கின்றன.
ஆகவே, கையுறையாக நீ கொண்டு வந்த இந்த காந்தள் மலர்கள் எமக்கு வேண்டாம்.
பாடல்:
செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழல்தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
(தோழி கையுறை மறுத்தது)
(குறுந்தொகை 1)
ஆசிரியர்: திப்புத்தோளார்
திணை: குறிஞ்சி
சொல்லும் பொருளும்:
செங்களம் – சிவந்த
போர்க்களம்
அவுணர் - அசுரர்
தேய்த்தல் - அழித்தல்
செங்கோடு - சிவந்த
கொம்பு
கழல்
- அசையும்
தொடி - வளையல்
சேய் - முருகன்
உரை:
இரத்தத்தால்
போர்க்களம் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த அம்பையும், அசுரர்களைக் குத்தியதால் சிவந்த தந்தங்களை
உடைய யானையையும், வீரவளையையும் உடைய முருகனுக்குரிய
இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.
குறிப்பு:
குன்றும், முருகன், யானை, காந்தள் ஆகிய கருப்பொருள்களும் குறிப்பிடப்பட்டிருப்பதால்,
இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
இயல்பில் சிவப்பு நிறமல்லாத
போர்க்களம், அம்பு, யானைத் தந்தம் ஆகியவற்றைச் சொல்லும்போது வலிந்து சிவப்பு நிறத்தைச்
சேர்த்துவிட்டு இயல்பாகவே சிவந்த நிறமுடைய காந்தள் மலரைச் சொல்லும்போது சிவப்பு என்பதை
நேராகக் கூறாமல் விட்டது தலைவனின் செயலில் தோழிக்கு உடன்பாடில்லாததால் இருக்கலாம்.
எங்கள் மலையிலே காந்தள் மலர்கள் நிறைய இருப்பதால் நீ கொண்டு வந்த காந்தள் மலர்கள் எனக்கு வேண்டாம் என்பது மணம் முடிக்கும் செய்தியோடு வா என்பதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.
Comments
Post a Comment
Your feedback