Skip to main content

Posts

Showing posts from March, 2022

எப்பத் தான் விடியுமோ?

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது விடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விடியும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இருள் விலகும் அறிகுறியே தெரியவில்லை. சூரியன் வந்தால் விடிந்து விடும். ஒருவேளை சூரியனுக்கு ஏதும் பிரச்சினையோ? அதனால் தான் இன்னும் வராமல் இருக்கிறதோ?  சூரியனை பாம்பு விழுங்கியிருக்குமோ? சூரியனின் தேரின் அச்சு முறிந்து  தேரில் கட்டியிருந்த குதிரைகள் கயிற்றை உருவிக்கொண்டு எங்காவது ஒடிவிட்டனவோ? சூரியன் செத்துப் போய்விட்டானோ? கிழக்கு என நினைத்துக் கொண்டு வேறு திசையில் போய் நின்று கொண்டிருக்கிறானோ? எப்பத் தான் விடியுமோ? எப்படி(டீ) விடியும்? அரவு விழுங்கிற்றோ அச்சுத்தான் இற்று புரவி கயிறுருவிப் போச்சோ - இரவிதான் செத்தானோ வேறுதிசை சென்றானோ என்தோழி எத்தால் விடியும் இரா.

அதற்கெல்லாம் யாருக்கு நேரம்?

குருஷேத்திரப் போர் நடக்கின்ற போர்க்களத்தில் கீதையை கண்ணன் உபதேசிக்கும் போது ஒரு பேயும் அதைக் கேட்டதாம். அந்தப் பேய்க்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாம்.    அதனால் அறம் அறிந்தவர்கள் கண்டு சொன்ன செய்திகளை காதில் வாங்கினால் கூட நாம் எப்படி இருந்தாலும் உயர்வான நிலைக்கு வரமுடியுமாம்.    எப்படியோ இருந்த பேய்க்குக் கூட ஒரு நிலையில் கீதோபதேசம் காதில் விழுந்தது. ஆனால் இன்று சமூகத்தில் அறம் பற்றிப் பேசினால் வேற்றுக்கிரக வாசி போலப் பார்க்கிற நிலை. பள்ளியில் கூட நீதிபோதனை வகுப்புகள் இல்லை. அப்படியிருக்க அறம் சொல்ல யார் இருக்கிறார்கள்?  அறம் சொல்வதை யார் கேட்கிறார்கள்?     அன்று அமரில் சொன்ன அற  உரை வீழ் தீக்கழுது மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன் மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு. ( இன்னிலை)

விதையும் வீணாகும்.

  பூத்தது காய்க்கும்.  காய்த்தது கனியாகும்.  கனியானது மரமாகும். மரத்திலிருந்து பூ வரும்.   மீண்டும் பூத்து அது காய்க்கும்.   ஆனால் பூக்காமலே காய்க்கும் மரங்களும் உண்டு. அதுபோல நாம் சொல்ல வருவதற்கு முன்பாகவே நாம் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொள்ளும் மனிதர்களும் உண்டு.   இன்னொரு வகையும் இருக்கிறது. பூத்துக் காய்த்து கனியான பின் அந்தக் கனியில் இருந்துவந்த விதையை சில இடங்களில் தூவும்போது அங்கிருந்து செடியோ மரமோ முளைக்காது. ஏனென்றால் விதைத்த இடம் வேலைக்கு ஆகாத நிலமாக இருக்கும்.    அதுபோல முட்டாள்களிடமும் தீயவர்களிடமும் என்னதான் நல்ல விஷயத்தை நீங்கள் சொன்னாலும் அவர்களுக்கு எட்டவே எட்டாது. அவர்கள் மூளையும் விதை முளைக்காத வேலைக்காகாத நிலம் போலத்தான். அங்கு விதை போட்டால் விதை தான் வீணாகிப் போகும்.   பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலுந் தோன்றா துணர்வு.   ( நல்வழி)

சண்டையும் இனிமை தான்

  நிழலில் வைத்திருந்த தண்ணீர் தான் சுவைக்கும். அன்புள்ள இடத்தில் வரும் சண்டை தான் இனிமையானது. நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. (திருக்குறள்) விளக்கம்: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. (மு.வரதராசன்)

மறந்ததால் தானே நினைத்தாய்.

  அங்கே இருக்கும்போதும் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் என்றேன். அப்போ அதுவரைக்கும்  மறந்திருந்திருக்கத் தானே நினைக்க முடிந்தது என்று கோபப்பட்டாள். உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். (திருக்குறள்) விளக்கம்: நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று  ஊடினாள். (மு.வரதராசன்)

குறை ஒன்றும் இல்லை

  குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா  என்ற அழகிய பாடலைக் கேட்கும்போதெல்லாம்   மனதுக்குள் நிம்மதியும் அமைதியும் வந்து சேர்வதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம்.  அந்தப் பாடலை எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக விளங்கியவர் ராஜாஜி. அவருக்குப் பின்பு கவர்னர் ஜெனரல் என்ற பதவி ஜனாதிபதி  (குடியரசுத் தலைவர்) பதவியாக மாற,   ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பின் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், காமராஜருக்கு முன்பாக சென்னையின் முதலமைச்சராகவும்  திறம்படப் பணியாற்றியவர் ராஜாஜி. சென்னை மாகாணம் முழுமைக்கும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர் அவர்.  தனிமனித ஒழுக்கம், கடவுள் பக்தி, தேசப்பற்று, இலக்கிய ஆர்வம் ஆகியவை ராஜாஜியின் தனி முத்திரைகள்.  பகவத் கீதையையும் ராமாயணத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ராஜாஜியை கவர்னர் ஜெனரல்  முதலமைச்சர் என எல்லோருக்கும் தெரியும்.  அதெல்லாம் தாண...

கண் தான் பிரச்னை...

  அவள் அழகு என் கண்ணுக்கு விருந்து தான்.  ஆனால் அவள் கண்ணோ எனக்கு எமன்.  ஒரே பார்வையில்   என் உயிரை உறிஞ்சிவிடும். கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். (திருக்குறள்) விளக்கம்: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. (மு.வரதராசன்)

அப்படி அறிகுறி இல்லை தானே!

  எப்போது நமக்கு வசதி வரும்?  எப்போது திடீரென்று ஏழையாகவோம்? தொடர்ந்து கடின உழைப்பும் விடா முயற்சியும் இருப்பவர்கள் இன்றோ நாளையோ உன்னதமான நிலைக்கு வருவார்கள். நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு எப்போது அழிவு ஆரம்பம்? தற்போது வசதி வாய்ப்பும், செல்வ வளமையும் உள்ளவர்கள் இனி கூடிய சீக்கிரம் செல்வத்தையெல்லாம் இழக்கப் போகிறார்கள் என்பதற்கு மூன்று அறிகுறிகள் இருக்குமாம். அறிகுறி 1: வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டும் தற்பெருமை பேசிக் கொண்டும் இருப்பது. அறிகுறி 2: முன்பு மாதிரி இல்லாமல் எதற்கெடுத்தாலும் கோபம் அதிகமாக  வருவது. அறிகுறி 3: நமக்கு உண்மையில் தேவை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசை வருவது. இந்த மூன்று அறிகுறிகளும் ஒருவருக்குத் தோன்றினால் கூடிய விரைவில் எல்லாச் செல்வத்தையும்  அவர் இழக்கப் போகிறார்  என்று அர்த்தமாம்.  தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்-முன்னிய பல் பொருள் வெஃகும் சிறுமையும், இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை. (திரிகட...

நண்டே please அழிக்காதே...

  நண்டே!  இந்த கடற்கரை வழியாகத்தான் அந்தத் தேர் போகும்.  அந்தத் தேரில் போவது என் காதலன். அவன் தேர் புறப்பட்டுப் போன பின்பு,  தேர்போன தாரையைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.  அதில் ஒரு சிக்கல்.  நண்டே! இப்போதெல்லாம் நீ உன்னுடைய வளைந்த கால்களைக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து அந்த தேர் போன தடத்தை அழித்து விடுகிறாய்.  நான் எப்போதும் போல, தேர் போன அந்தத் தடத்தை கண்ணாரக் கண்டு மகிழவேண்டும்.  எனக்கு இருக்கும் ஒரே சந்தோசம் அது தான். அதனால் என் மனக் குறையைச் சொல்லி உன்னிடம் பிச்சை கேட்கிறேன்.  அந்தத் தடத்தை அழிக்காதே please . கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;  ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன்  நெடுந் தேர் கடந்த வழியை எம் கண் ஆரக் காண,  நடந்து சிதையாதி, நீ! (ஐந்திணை ஐம்பது)

எங்கோ பார்க்கும்போது

  நான் பார்க்கும்போது அவள் வெட்கத்தில்  தரையைப் பார்க்கிறாள். நான் எங்கோ பார்க்கும்போது என்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கிறாள். யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். (திருக்குறள்)   விளக்கம்: யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். (மு.வரதராசன்)

உன்னைப் போலவே...

  போருக்குச் சென்றுவிட்டு போர் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த வீரன் தன் மனைவியிடம் கூறுகிறான். உன்னைப் போலவே அங்கே மயில் ஆடுவதைப் பார்த்தேன். உன் நெற்றியைப் போலவே   முல்லை மணப்பதை உணர்ந்தேன். நீ பார்ப்பதைப் போலவே மான்கள் பார்த்ததைக் கண்டேன். உன் நினைவு வந்தது. வந்துவிட்டேன். உன் அழகிய நெற்றியைக் காண கார் மேகத்தைக் காட்டிலும் விரைவாக வந்துவிட்டேன்.   நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே . (ஐங்குறுநூறு 492)    

பாவம் இதற்குத் தெரியவில்லை

  நினைத்தவுடன்  போய்விடுகிறது மனசு அவனிடம் ... போகத் தெரியாத கண்கள் மட்டும் கண்ணீர்க் கடலில். உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். (திருக்குறள்) விளக்கம்: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை. (மு.வரதராசன்)

யார் கிட்ட!

  சண்டை போட்டுப்  பேசாமல் இருந்தேன் அவனோடு. பொய்யாகத் தும்மினான் நான் "நூறு வயது" என்று  வாழ்த்துவேன் என்று. யார் கிட்ட! ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. (திருக்குறள்) விளக்கம்: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். (மு.வரதராசன்)

யாருடன்?

  அவள் அழகையே  மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். "யாருடனோ என்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். யாருடன்" என்றாள். நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. (திருக்குறள்) விளக்கம்: அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். (மு.வரதராசன்)

அவ்வளவு நுட்பம்...

  என் கண்ணுக்குள்ளே தான் இருக்கிறான் அவன் எப்போதும். படக் படக் என  என் கண்கள்  இமைக்கும் போதும்  வலிக்காது அவனுக்கு. அவ்வளவு நுட்பமானவன் அவன். கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர். (திருக்குறள்) விளக்கம்: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர். (மு.வரதராசன்)

இது தானா அந்த ரகசியம்!

  அழகிய குளத்தின் நடுவில் ஒரு மலர் மலர்ந்து நிற்கிறது.  அது குவளை மலர்.  அதில் வண்டுகள் ரீங்காரம் கேட்கிறது.  அதைப் பார்க்கும் போது ஒற்றைக் காலில் குளத்தின் நடுவில் தவம் செய்வது போல் இருக்கிறது.  அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் வீட்டுக்கு வருகிறாள்.   அப்போது கூர்மையான வேலோடு பாண்டிய மன்னன் குதிரையில் போகிறான். அவன் மார்பில் குவளை மலர் மாலை அவனைத் தழுவிக் கொண்டிருக்கிறது.  ஓ... இத்தனை தவமும் இதற்குத் தானா. அவனைத் தழுவும் ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.   அப்புறம் என்ன ...?    அவளும் ஒற்றைக் கால் தானா இனி! கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல் வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால் கொண்டு இருக்கப் பெற்ற குணம். (முத்தொள்ளாயிரம் )

நினைப்பதில்லையே

  நினைப்பதேயில்லை நான் அவளை. மறந்தால் தானே நினைக்க.. நான் தான் மறப்பதேயில்லையே எப்போதும். உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.(1125) (திருக்குறள்) விளக்கம்: போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!. (மு.வரதராசன்)

சுட்டு விடக் கூடாதல்லவா?

  சூடாக நான் எதையும் குடிப்பதில்லை. என் நெஞ்சுக்குள் இருக்கும் அவனைச் சுட்டுவிடும் என்று. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. (திருக்குறள்) விளக்கம்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம். (மு.வரதராசன்)

அவர் பாட்டுக்கு அங்கே

  நீ வேறு நான் வேறா என்றார் அன்று. அவர் பாட்டுக்கு அங்கே நான் பாட்டுக்கு இங்கே இப்படியாக இன்று. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. (திருக்குறள்)  விளக்கம்: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது. (மு.வரதராசன்)

என்னைத் தவிர யார் இருக்கிறார்கள்.

  எல்லாரையும் தூங்கவைத்து விட்டு தனியாகவே இருக்கிறது இந்த இரவு. பாவம்... என்னைத் தவிர யாரும்  துணையில்லை அதற்கு. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. (திருக்குறள்) விளக்கம்: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது. (மு.வரதராசன்)

மின்னலுக்கு எண்ணெய் தடவி

  நன்றாகப் பார்ப்பதற்குள் கடந்து சென்று விடும் எதையும் "மின்னல் போல" என்று சொல்லுவார்கள்.  சைக்கிள் நன்றாக வேலை செய்ய அடிக்கடி chain உள்ளிட்ட பாகங்களுக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் விட்டுப் பராமரிப்பார்கள். அதாவது அப்படி எண்ணெய் அல்லது கிரீஸ் விடும் போது அந்த சைக்கிள் முன்பை விட வேகமாகப் போகும்.  இப்போது தான் பார்த்த மாதிரி இருந்தது. அதுக்குள்ளே ஆளையே காணோம் என்று சிலரைச் சொல்வார்கள். அப்போது "கண்ணு மாயம் விட்ட மாதிரி காணாமல் போய்விட்டான்" என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.  இந்தக் கண்ணு மாயம் விட்டது போல் காணாமல் போவதை ஆங்கிலத்தில் greased lightning என்பார்கள்.    மின்னலே கண்ணில் பார்க்க முடியாத வேகம். அப்படியிருக்க மின்னலுக்கு எண்ணெய் தடவி விட்டது போல என்பது "என்னா வேகம்" என்ற திகைப்பைக் காட்ட வந்த மரபுத் தொடர். "வாம்மா மின்னல்" என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி greased lightning என்பதற்கு செய்முறை விளக்கம் போல இருப்பதைப் பார்த்திருப்போம். When he saw his father, he ran out the door like greased lightning. என்பது பயன்பாட்டுக்கான ஒரு உதாரணம். grease...

அடுத்த பிறவியில்?

  இந்தப் பிறவியில் உன்னைப் பிரிந்து இருக்க முடியாது என்றேன். கண்ணீரோடு அவள்  கண்கள், அப்போ அடுத்த பிறவியில்? என்ற கேள்வியோடு. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். (திருக்குறள்) விளக்கம்: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். (மு.வரதராசன்)

Arm chair critic ? அப்படினா?

மாலை நேரங்களில் தொலைக் காட்சிகளில்  ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஒரு 4 பேர் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.  அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கூட சில நேரங்களில் தனக்கென ஒரு கருத்தை வைத்துக்கொண்டு விவாதத்தை தன் போக்கில் இழுக்க முயற்சி செய்து கொண்டு இருப்பார். அவரது முயற்சி சில நேரங்களில் நகைச்சுவையாகவும் சில நேரங்களில்  பரிதாபத்துக்குரியதாகவும் இருக்கும். உள்ளூர் பிரச்சனை முதல் உலகப் பிரச்சனை வரை அலசுவார்கள். எந்தத் தமிழ்த் தொலைக்காட்சியிலும் இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று UPSC, Group exam எழுதும் யாரும் அதைப் பார்ப்பதில்லை . ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், அது வெறும் பரபரப்புக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்று. யாரெல்லாம் அப்படிப்பட்ட நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்று கவனித்தாலே அந்த நிகழ்ச்சியின் நோக்கமும், யாருக்காக அது என்பதும் நமக்குத் தெரிந்துவிடும். அத்தகைய நிகழ்ச்சியில் வெற்றுக் கூச்சலைத் தவிர அல்லது வெறும் கருத்துத் திணிப்பைத் தவிர ஒன்றுமில்லை என்பது எப்போது நமக்குப் புரியும்?   ஒரு ந...

ஒரு நாள் அல்ல ஏழு நாள்

  ஒரு நாள் என்பது ஏழு நாள் போலத் தான். வெளியூர் சென்றவன் எப்போது வருவான் எனக் காத்திருக்கும்  என் போன்ற பெண்ணுக்கு.  ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(1269) (திருக்குறள்)  விளக்கம்: தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல (நெடிதாக) கழியும். (மு.வரதராசன்)

காத்து வாக்குல...

"புது கார் புக் பண்ண போறீங்களாமா?" "அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?" "காத்துவாக்குல காதுல விழுந்துச்சு'. இது போன்ற உரையாடல்கள் நம் காதில் விழுந்திருக்கும்.  'காத்துவாக்குல' என்பது ஒரு விஷயத்தைக் குறித்துத் தெரிந்து கொள்வது. அந்த விஷயத்தை மற்றவர்களை விட கொஞ்சம் முன்பாகவே தெரிந்துகொள்வது. எல்லோருக்கும் தெரிந்த பின் ஒரு விஷயத்தை ''காத்துவாக்குல" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி முன்னதாகக் கேள்விப்படுகிற செய்தி உண்மையா இல்லையா என்று தெரியாதபோது 'அரசல் புரசலாகக்' கேள்விப்பட்டதாகச் சொல்லி விடுவதுண்டு. காற்றில் வரும் வாசம் முகர்ந்தால் தெரியும். காற்றில் வரும் ஓசை கேட்டால் தெரியும். எனவே கவனிக்கத் தெரிந்தவர்களுக்கு காற்று ஒரு கருவூலம். பொதுவாகவே மனிதர்களை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம். விலங்குகள் தனக்கான இறையை மோப்ப சக்தியைக் கொண்டே உணர்கின்றன. அப்படி மோப்பம் பிடிக்க காற்று அவசியம். காற்றில் அவை மோப்பம் பிடிப்பதை சில நேரங்களில் அவற்றின் மேனரிஸத்தைப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான நேரங்களில் ...

மறைக்கும் தானே?

    மையிடுவதில்லை நான் கண்ணுக்கு. என் கண்ணுக்குள்  இருக்கிறான் அவன். மையெழுதினால் மறைக்காதா அவனை? கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.(1127) (திருக்குறள்)  விளக்கம்: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம் !. (மு.வரதராசன்)

செங்களம் பட- முருகப் பெருமான் மலை

இது குறுந்தொகையின் முதல்பாடல். தான் விரும்பிய பெண்ணைப் பார்க்க வருகிறான் அவன். அந்தப் பெண் அங்கு இல்லை. அங்கு இருந்த அவளது தோழியிடம் தலைவியிடம் கொடுக்குமாறு காந்தள் மலர்க் கொத்துக்களைத் தருகிறான். அதை அவள் வாங்க மறுத்துக் கூறியது தான் இந்தப் பாடலின் செய்தி.   பாடல் தரும் செய்தி: இது வீரவளை கொண்ட முருகப்பெருமானின் மலை. போர்க்களமே ரத்தத்தால் சிவப்பாகும்படி அசுரர்களைக் கொன்று, அந்த இரத்தம் தோய்ந்த சிவந்த அம்பைக் கொண்ட முருகப்பெருமானின் மலை. அசுரர்களைக் குத்தியதால் தந்தங்கள் சிவந்து போன யானைகள் இருக்கின்ற முருகப் பெருமான் மலை. இந்த மலையில் ரத்த நிறத்தில் சிவந்து இருக்கின்ற காந்தள் மலர்க் கொத்துக்கள் எங்கும் பூத்துக்கிடக்கின்றன.   ஆகவே, கையுறையாக நீ கொண்டு வந்த இந்த காந்தள் மலர்கள் எமக்கு வேண்டாம். பாடல்: செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல்தொடி சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. (தோழி கையுறை மறுத்தது) (குறுந்தொகை 1) ஆசிரியர்: திப்புத்தோளார்  திணை: குறிஞ்சி சொல்லும் பொருளும்:   செங்களம்  –  சிவந்த...

இன்னும் எதற்கு ஒப்பனை?

  இன்னும் எதற்கு ஒப்பனை? இளமான் போலப் பார்வை இயற்கையாய் வந்த நாணம் இதுவே பேரழகு.   பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து. (திருக்குறள்)

கண்ணன் என் தாய்-1

  கண்ணனை த்  தன் தாயாக ப்  பாவித்து பாரதி பாடிய பாடல் இது.   வானம் பூமி எல்லாமே கண்ணன் வடிவாய் இருக்க நான் குழந்தையாக இருக்கிறேன். குழந்தையான  என்னை  வானம் தன்னுடைய இரு கைகளில் அள்ளி எடுத்து  பூமி த்  தா யி ன் மடியில் வைத் த து.  என் பிஞ்சு வாயில் பாலூட்டி மனம் மகிழ்வாள்  என்  அ ன்னை . அந்த அமுதம், தெவிட்டாத சுவையில் உயிரையும் உள்ளத்தையும் நிறைக்கும். குழந்தையாய் அவள் மடியில் நான் இருக்க பல கதைகள் சொல்லி என்னை மகிழ்விப்பாள்.   எத்தனை எத்தனை கதைகள்.    இன்பமாகச் சில கதைகள்.  அவை என்னை மேன்மைப்படுத்துவதாகவும் எனக்கு வெற்றி தருவதாகவும் அமைந்திருக்கும் கதைகள்.   துன்பமாகச் சில கதைகள்.  தோல்வியைக் குறித்தும் வீழ்ச்சியைக் குறித்தும் எனக்கு அறிவு தரும் அந்தக் கதைகள்.   என் வாழ்வின் பருவங்களுக்கு ஏற்ப வயதுக்குப் பொருத்தமான கதைகளை அன்போடு அவள் என் விருப்பம் அறிந்து சொல்லி வருவாள்.    அந்தக் கதைகளில் என் மனம் பரவசத்தில் திளைக்கும்.   உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்...

வெட்டியாவே இருக்கட்டும் அந்தப் பெட்டி

 டி.வி யை இடியட் பாக்ஸ் என்று சிலர் கூறுவார்கள். யாரையெல்லாம் எளிதாக முட்டாளாக்க முடியுமோ அவர்களை எல்லாம் தன்னை விட்டுப் போக முடியாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பெட்டி என்பதால் டி.வி யை முட்டாள்களின் பெட்டி அல்லது இடியட் பாக்ஸ் என்று கூறுகிறார்கள். அது சரி தான். அதே நேரத்தில் சிலர் டிவியை பண்டோராவின் பாக்ஸ் (Pandora's box) என்று சொல்கிறார்கள்.  அது யார் பண்டோரா?  ஏன் டிவியை அப்படிச் சொல்கிறார்கள்? அதற்கு இந்தக் கிரேக்கப் புராணக் கதை தான் காரணம். எல்லாக் கடவுள்களுக்கும் பெரிய கடவுள் சியோஸ்(Zeus). அந்தக் கடவுளின் கட்டளைப்படி பூமியில் ஒரு பெண் உருவாக்கப்படுகிறாள். மண்ணையும் தண்ணீரையும் கலந்து அந்த பெண் உருவாக்கப்பட்டாள். அவள் பெயர் தான் பண்டோரா. அவளுக்கு அழகு, கல்வி என எல்லாவற்றையும் மற்ற கிரேக்கக் கடவுள்கள் கொடுத்தனர்.  பண்டோராவுக்கு சியோஸ் ஒரு அழகிய ஜாடியைப் பரிசாகக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அதை எப்போதும் திறக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். ஆனால் ஆர்வக்கோளாறு காரணமாக பண்டோரா அதைத் திறந்தாள். உடனே அந்த ஜாடிக்குள் இருந்த அத்தனை தீய சக்திகளும் ஜாடியை விட்டு ...

மாலை எனை வாட்டுது...

  மாலை நேரம் வந்து என்னை பாடாய்ப்படுத்துகிறது.  மாலை மட்டுமா வருகிறது? மாலை வந்தாலே கூடவே இந்தப் புல்லாங்குழல் ஓசையும் வந்துவிடுகிறது. இந்த நாட்டு மன்னன் இளவளவன் கூட இந்த மாலை நேரத்தை "வரக்கூடாது" என்று ஒரு கட்டளை போட்டுத் தடுக்காமல் இருக்கிறான். என்னை வதைக்கும் இந்த மாலை நேரத்தையே தடுக்காத மன்னன் மக்களை எப்படிப் பாதுகாப்பான்? என்ன மன்னனோ இவன்?     தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன் மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானே - மாலைக்கண் கோவலர்வாய் வைத்த குழல் (முத்தொள்ளாயிரம்)