வறுமை தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இருக்கலாம். அது போல வறட்சி என்றால் என்னவென்று தெரியாமல் வளரும் மரங்கள் இருக்குமா?
அப்படி இருந்தால், செல்வம் கொட்டிக்கிடக்கும் வீட்டில் பிறந்த குழந்தைகள் போல அந்த மரங்கள் வளமான பூமியில் வாழும் வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தானே.
அப்படி ஒரு வாழ்க்கையைக் காட்டுகிறது இந்தப் பாடல்.
அந்தப் பெண் சொல்கிறாள்.
வறட்சி எப்படி இருக்கும் என்று தெரியாத மரங்கள் மிக்க மலைச்சாரல் அது.
அந்த மலையில் ஓர் அகன்ற குன்று.
அந்தக் குன்றில் ஓர் ஆண்யானை.
அதன் பக்கத்தில் அதன் அன்புக்குரிய பெண்யானை.
அங்கே புத்தம் புதிதாகப் பூத்த அழகிய காந்தள் பூக்கள்.
அப் பூக்களில் பல தரையில் சிதறிக் கிடந்தன.
அவை எப்படிக் கிடந்தன தெரியுமா !
சும்மா இருக்க முடியாமல் யானைகள் ஒன்றோடொன்று தாக்கிக்கொண்டபோது அவற்றின் முறிந்துபோன கொம்புகள் கிடப்பது போல் காந்தள் பூக்கள் பூத்துக் கிடந்தன.
( சிதறிக் கிடக்கும் பூக்கள் போல யானைத் தந்தங்கள் என்றால் எத்தனை யானைகள் அந்தக் குன்றில் ...)
எங்கு பார்த்தாலும் நீர் ஊற்றுகள்...
அவை ஒலியுடன் மலையிலிருந்து வீழ்ந்து அருவியாக நீரை அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தன.
அது தான் என்னவன் ஊர்.
(ஊர்ப் பெருமையை அந்தப் பெண் சொல்லும் அழகில் கொஞ்சம் கர்வம் தெரிகிறது தானே!)
எல்லா மலைகளும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்திருக்கும் போல.
இப்போது அருவி என்பது நமக்கெல்லாம் tourist attraction.
இன்னும் சில ஆண்டுகளில் அருவி என்பது அதிசயமாகப் பார்கப்படுமோ?
வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,
மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன,
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!
(கலித்தொகை)
Comments
Post a Comment
Your feedback