என் தந்தை கடலில் போய் மீன் பிடித்து வந்தார்.
அதைக் கருவாடாக்க கரையில் காய வைத்துவிட்டு வந்தோம்.
அந்தக் கருவாடு காயும்போது தின்ன வரும் பறவைகளை விரட்டினோம்.
அப்புறம் கொஞ்ச நேரம் மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இளைப்பாறினோம்.
ஞாழல் மரக் கிளையில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடினோம்.
கீழ்க் காற்று குவித்த மணலில் குரவை ஆடினோம்.
அதன் பிறகு என் தோழிகளுடன் கடலில் குளித்து விளையாடினோம்.
மணிப்பூத் தழைகளால் ஆடை கட்டி அதை அணிந்துகொண்டோம்.
இதைத் தவிர நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை.
ஆனால் எங்கள் ஊர்ப் பெண்கள் எங்களைப் பற்றி ஏதேதோ பேசுகின்றனர்.
அதைக் கேட்டு என் தாய் எனக்கு இரவும் பகலும் கட்டுக்காவல் போட்டிருக்கிறாள்.
அதற்கு என் தாய் சொல்லும் காரணம், கடற்கரையில் தேர் ஒன்று நான் இருக்கும் இடம் அருகில் வந்து வந்து போகிறதாம்.
ஆக, விளையாட்டில் அவனும் இருந்திருப்பானோ!
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி! ''பெருந்துறை,
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு'' எனவே.
(அகநானூறு)
Comments
Post a Comment
Your feedback