பூவுக்கும் இளமை, முதுமை எல்லாம் இருக்கிறது.
அரும்பு , நனை ,முகை ,மொக்குள் ,முகிழ் ,மொட்டு. , போது, மலர் என்பதெல்லாம் ஒரு பூவின் வளர்பிறைப் பருவங்கள்.
அதன் பின் மெல்ல மெல்ல தேய்பிறைப் பருவம் வந்து விடும். வீ. பொதும்பர், பொம்மல் ,செம்மல் என்பதெல்லாம் அந்தக் காலத்தில் வரும் பருவங்கள்.
அரும்பு மலர் ஆகும் வரை அழகு கூடும். அதன் பின் அப்படியே மாறும். அதனால் தான் பூவின் பருவங்கள் அரும்பு முதல் மலர் வரை என இலக்கியங்கள் கூறும்.
ஒரு பெண் தன் காதல் நோய்க்கு அப்படி பருவம் சொல்வதை குறள் ஒன்று சொல்லும்.
என் காதல் நோய் காலையில் அரும்பு, பகலில் போது என வளர்ந்து மாலையில் மலர் ஆகிறது என்கிறாள் அவள்.
மலரோடு பருவத்தை நிறுத்திக் கொள்வது ஒரு அழகு. அதாவது என் காதலுக்கு முதுமை எல்லாம் கிடையாது. அரும்பு மலராகும். அப்புறம் எப்போதும் மலராகவே இருக்கும். அதற்கு மேல் காதலுக்கு எப்போதும் வயதாகாது என்பது தான் அவள் சொல்ல வந்த செய்தி.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
(திருக்குறள்)
விளக்கம்:
இந்த நோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback