வல்லின எழுத்துகளான கசடதபற எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி காளமேகப்புலவர் எழுதிய பாடல் இது.
துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் பொடித்துத்
தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டித்துக் காடு.
சீர் பிரித்த பின்:
துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல்
தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத்
தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக்
கடி படைத்துக் காட்டித்துக் காடு.
சொற்பொருள்:
கோடல் -காந்தள் மலர்
கடுக்கை -கொன்றை
தோகை - மயில்
கடி - வாசனை
பாடலின் பொருள்:
இது கார்காலம் குறித்த பாடல்.
காந்தள் மலர்கள் முகிழ்த்து ஒளிகொண்டு அரும்புகளை எடுத்தன;
கொன்றைகள் பொன்போல் ஒளிரும் மாலைகளைத் தொங்கவிட்டன;
வளையல் அணிந்த மகளிர் தோள்கள் துடித்தன;
மயில்கள் கூத்தாடின.
இவ்வாறு காடு புதுமணம் படைத்துக் காட்சி தந்தது.
க், ச், ட், த், ப், ற் என்பனவாகிய வல்லின ஒற்றுகள் தொடர்ந்து செறிவாக இடம் பெறுமாறு செய்யுள் அமைதல் செறிவு வகையாகும்.
Comments
Post a Comment
Your feedback