மின்சாரத்தைப் பற்றிப் பேசும்போது ஆம்பியர்
(Ampere) என்ற சொல் கூடவே வரும்.
பிரான்ஸ் நாட்டின் இயற்பியலாளரும், மின்காந்தவியல் (Electrodynamics)பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் (Andre-Marie Ampere) பிறந்த தினம் 1775 ஜனவரி 20.
பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது.
ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது.
பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார்.
அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார்.
சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் தந்தை.
கணித நூல்களைத் தவிர இயற்பியல் தொடர்பான நூல்களையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார்.
இவற்றைத் தவிர வரலாறு, பயணங்கள், கவிதை, இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்.
பள்ளிக்குச் செல்லாமலேயே தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி கற்றுவந்த இவர், தந்தையின் மரணததிற்குப் பின் ஓராண்டு காலம் படிப்பை நிறுத்திவிட்டார்.
22-வது வயதில் தனிப்பட்ட முறையில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கணிதம் தவிர வேதியியல், மொழிகள், வானியல் மற்றும் இயற்பியலும் கற்றுத் தந்தார்.
1804-ல் பாரீஸ் சென்ற இவர், அங்கு பல்கலைக்கழகத்துக்கு இணையான கணிதப் பாடங்களை எகோலே பாலிடெக்னிக் நிறுவனத்தில் கற்றுத் தந்தார். 1809-ல் அங்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் மின்சார பாட்டரி தயாரிக்கப்பட்டது. காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என்பதும் கண்டறியப்பட்டது.
மின்சாரம் ஏன் காந்த விளைவை உண்டாக்குகிறது என்பதை அறிந்துகொள்ள, அதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரே மாதிரியான மின்னூட்டங்கள் (electric charge) ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.
மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டினார். இவை இரண்டும் இணைக்கப்பட்டு, மின்காந்தவியல் அல்லது மின்னியக்கவியல் (electrodynamics) என்ற புதிய துறை பிறந்தது.
இவர் கண்டறிந்த மின்னோட்டத்துக்கும் அது தூண்டும் காந்தப்புல சுற்றோட்டத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விதி தற்போது ஆம்பியரின் மின்சுற்று விதி (Ampere’s circuital law) என்று குறிப்பிடப்படுகிறது. எலக்ட்ரான் என்று இப்போது அறியப்படும் துகள் உள்ளதை எடுத்துக் கூறினார்.
மேலும்,
வேதியியல் தனிமம் ஃப்ளோரினைக் கண்டறிந்தார். தனிமங்களின் முறையான, அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை கண்டறியப்படுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே தனிமங்களின் பண்புகள் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தினார்.
மின்னோட்டத்துக்கான அனைத்துலகமுறை அலகு(IS unit) இவரது பெயரில் ஆம்பியர் எனக் குறிப்பிடப்படுகிறது.
முறையான கல்வி பெறாவிட்டாலும் தன் மேதமையால் தலைசிறந்த ஆசிரியர், விஞ்ஞானி, கணிதவியலாளராக உயர்ந்த ஆந்த்ரே-மரி ஆம்பியர் 1836-ம் ஆண்டு 61-வது வயதில் மறைந்தார்.
Comments
Post a Comment
Your feedback