செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளைக்கு என்பார்கள்.
அது அனுபவத்தில் வந்த சொற்கள். அதை ஒரு புறநானூற்றுப் பாடல் இன்னும் விரிவாகக் கூறுகிறது.
மத்திய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையைத்
தாக்கல் செய்யும் போது ஒரு சங்கப் பாடலை மேற்கோள் காட்டினார் நிதியமைச்சர்.
அப்போது அந்தப் பாடலைக் கூறி தமிழ்நாட்டு எம்பிக்கள் இருக்கின்ற திசையைப் பார்க்க,
அவர்களோ தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருப்பதையும் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்ததையும் டிவியில் பார்த்தோம். அந்தப்
பாடல் இதுதான்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.
(புறநானூறு -184)
(பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார்
பாடியது.)
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால்,ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.
ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண
ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு
அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து
மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.
அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத, புகழ்பாடும் கூட்டத்தோடு ஆரவாரமாக மக்கள் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் அந்நாடும் கெடும்.
சொற்பொருள் விளக்கம்:
காய் நெல் - விளைந்த நெல்.
மா - ஒருநில அளவு (ஒருஏக்கரில் மூன்றில் ஒருபங்கு).
செறு - வயல்
தமித்து - தனித்து
புக்கு - புகுந்து.
யாத்து - சேர்த்து
நந்தும் - தழைக்கும்.
வரிசை - முறைமை
கல் - ஒலிக்குறிப்பு.
பரிவு - அன்பு
தப - கெட
பிண்டம் - வரி, பொருள்
நச்சின் - விரும்பினால்.
புலம்-வயல்
கவளம்- உணவு.
தொடர்புடைய செய்திகள்:
மதுரையை ஆண்ட பாண்டியன் அறிவுடை நம்பி புறநானூற்றில் 188 வது செய்யுளை இயற்றியுள்ளான். தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் அதிக வரி வாங்கினான். அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறும் வகையில் இந்தப் பாடலைப் பாடி விளக்கினார் பிசிராந்தையார்.
பாடாண் என்னும் புறத்திணை ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
செவியறிவுறூஉ என்னும் புறத்துறை அரசன்
செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துவது.
யானைபுக்க புலம் என்னும் உவமை இன்றும்
பயன்பாட்டில் உள்ளது.
Comments
Post a Comment
Your feedback