இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்இளங்கோடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு பாடல் திரைப்படப் பாடலாகவும் பாடப்பட்டுள்ளது.
கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வர, மாதவி பாடிய ஒரு கானல் வரிப்பாடல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதே காரணம்.
அந்தப்பாடல் தான் ஒரு திரைப்படப் பாடலாகப்பட்டது.
சலீல் சௌத்ரி என்ற வங்கமொழி இசையமைப்பாளரின் இசையில்
P சுசீலா மற்றும் K J யேசுதாஸ் ஆகியோர் தனித்தனியே அந்தப் பாடலைப் பாடியிருக்கின்றனர். அந்தப் பாடல்கள் 1973 ஆம் ஆண்டு ராமுகாரியத் என்ற இயக்குநரின் இயக்கத்தில் தயாரான கரும்பு என்ற படத்துக்காக எடுக்கப்பட்டன.
சிலப்பதிகாரத்தில் அந்தப் பாடல் இடம்பெறும் கோவலன் பிரிந்து செல்லும் சூழலைக் கருத்தில் கொண்டு சக்கரவாகம்( chakravaaham) என்ற ராகத்தில் K J யேசுதாஸ் பாடியிருக்கிறார். அதே பாடலை ஒரு விழாக் கொண்டாட்டத்தில் பாடுவது போல குழுவினரோடு சேர்ந்து P சுசீலா பாடியிருக்கிறார். என்ன காரணத்தினாலோ படம் வெளியாகவில்லை.
அந்தப் பாடலின் வீடியோ இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தப் பாடலைக் கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும். அதற்கு முன்பாக பாடல் வரிகளை ஒருமுறை படித்து விட்டுப் பிறகு பாடலைக் கேளுங்கள்.
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி
உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி
பாடலைக் கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.
சிலப்பதிகாரம் பற்றி நாம் அறிந்த செய்திகளை மறுபடியும் நினைவுப்படுத்தவே பின்வரும் செய்திகள்.
இளங்கோவடிகள், தம் காப்பியத்தில், நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கின்றார்.
முப்பது காதைகளுடைய காப்பியத்தில், நான்கு காதைகள் மக்களின் ஆடல் பாடல்களைப் பற்றியே அமைந்துள்ளன. அவை கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை ஆகிய பகுதிகளாகும்.
கானல்வரியில் கடற்கரைச் சோலையிலுள்ள மீனவர்களின் பாடல்களும், காவிரி ஆறு பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன.
வேட்டுவவரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார்.
ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன.
குன்றக்குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல் பாடல்கள் உள்ளன.
இவை நான்கும் தவிர, இருபத்தொன்பதாவது காதையில் பலவகை நாட்டுப் பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார்.
பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துகவரி, ஊசலாடிப்பாடும் ஊசல்வரி, நெல்குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அமைத்துள்ளார். இவையெல்லாம் இளங்கோவடிகளின் கலையுள்ளத்தையும், மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த பண்பையும் வெளிப்படுத்துகின்றன.
தமிழர்களின் இசை இலக்கண நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது. வாழ்த்துப்பாடல், அரங்கேற்றுகாதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, துன்பமாலை, ஊர் சூழ்வரி, வஞ்சினமாலை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும் இசைப்பாடல் அமைதி பற்றியும் விளக்குகின்றன.
மாதவி, தன் நாட்டியக் கலையை ஒரு நாட்டிய ஆசிரியரிடம் மட்டும் பயிலவில்லை.
அவ்வாசிரியருடன், இசை, தண்ணுமை, குழல், யாழ் ஆசிரியர்களிடம் தனிப்பயிற்சி (Tuition class) பெற்று கலையரசியாக தன்னை உயர்திக்கொண்டாள்.
Comments
Post a Comment
Your feedback